நடத்தை விதிகளை மீறிய ஆம் ஆத்மி மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்? : தேர்தல் ஆணையத்துடன் பாஜ மோதல்

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் மீது சரமாரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதாக தேர்தல் ஆணையத்தை பாஜ சாடியுள்ளது. மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள சந்தித்து பாஜவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜேந்தர் குப்தா கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் உள்பட அக்கட்சியினரின் தேர்தல் நடத்தை விதிமீறல்களை விரிவாக எடுத்துரைத்து தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் அதிகாரிகளான உங்களிடம் இதுவரை ஏகப்பட்ட புகார்களை அளித்துள்ளோம். கடுமையான நடவடிக்கையை அவர்கள் மீது எடுக்கும்படி வலியுறுத்தி இருந்தோம்.

ஆனால், இதுவரை உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மறைமுகமாக அக்கட்சியை நீங்கள் ஆதரிப்பதாக கருத வேண்டியுள்ளது.  உடனடியாக கடுமையான, அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், புகார்கள் நீர்த்து போகும். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதிப்பது, குறைகள் சரி செய்யப்பட வேண்டும் எனும் எங்களது உரிமைக்கு மறுக்கப்படும் அநீதியாக கருதுகிறோம். நேர்மையாகவும், சிறப்பாகவும் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே, விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உடனே எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தேர்தல் அதிகாரிகளுடன் குப்தா மோதலில் ஈடுபட்டார்.

Related Stories: