வேலங்காடு பொற்கொடியம்மன் ஏரித்திருவிழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்

அணைக்கட்டு: வேலூர் அருகே உள்ள வேலங்காட்டில் பொற்கொடியம்மன் கோயிலில் ஏரித்திருவிழா  இன்று கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட வேலங்காடு சித்தேரி பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை கடைசி புதன்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான விழா கடந்த 24ம் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 5ம் தேதி இரவு ஏரியில் பச்சைபோடுதல் நடந்தது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.  இரவு 8 மணியளவில் இன்னிசை கச்சேரி நடந்தது.  

தொடர்ந்து வல்லண்டராமம் கிராமத்தில் 11.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் புஷ்பரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து வாண வேடிக்கை நிகழ்ச்சி அதிவிமரிசையுடன் நடந்தது. வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து புறப்பட்ட தேர், திரளான பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து சென்றது.  தொடர்ந்து அம்மன் தேர் அன்னாசிபாளையம் கிராமத்தில் வீதி உலா சென்றது. அங்கு கிராம மக்கள் வழிபாடு செய்தனர். இதையடுத்து வேலங்காடு ஏரிக்கு செல்லும் நிகழ்வு நடந்தது. இவ்விழாவுக்கு வேலூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் பச்சை ஓலைக்கட்டிய மாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்டமாக வந்தனர். தாங்கள் கொண்டு வந்த ஆடு, கோழி ஆகியவற்றை நேர்த்திக்கடன் செலுத்தி மாவிளக்கு படையிலிட்டு வழிபட்டனர்.  

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப ரத தேரோட்டத்தில் காப்புக்கட்டி விரதம் இருந்த 300க்கும் மேற்பட்டோர் தேரினை தோள் மீது சுமந்து ஏரியில் உள்ள கோயிலில் தேரை நிலை நிறுத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு ஆகியவற்றை செலுத்தினர். விழாவில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், 4 கிராம மேட்டுக்குடிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: