சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்: கிரண்பேடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு

புதுடெல்லி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு சார்ந்த விஷயங்களில் கிரண்பேடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் இதனால் அரசால் சரிவர செயல்படமுடியவில்லை எனவும் நாராயணசாமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வது போல் துணை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் உள்ளன. அரசிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவுகளை ஆளுநர் கிரண்பேடி பிறப்பிக்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நிகராக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, அதிகாரிகளிடம் அரசு ஆவணங்களைப் பெறுவது, ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பிப்பது என மாநில அரசின் அதிகாரங்களில் துணை ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு உள்ளது. எனவே, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு செல்லாது என அறிவிக்குமாறு கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், ஆவணங்களை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது எனவும் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்தும் கிரண்பேடிக்கு ஆதரவாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: