பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்ததால் கம்பீரமாக காட்சியளிக்கும் டணாய்க்கன் கோட்டை கோயில்

சத்தியமங்கலம்: பவானிசாகரின் நீர்மட்டம் சரிந்து வருவதால் அணை நீர்தேக்கப்பகுதியில் மூழ்கி இருந்த டணாய்க்கன் கோட்டை என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள மாதவராய பெருமாள் கோயில் முழுவதுமாக வெளியே தெரிகிறது. ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் அணையால் ஈரோடு, திருப்பூர், கருர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 49 அடியாக குறைந்து விட்டதால் அணை நீர்தேக்கப்பகுதியில் உள்ள பழங்கால கோயில்கள் மற்றும் டணாய்க்கன் கோட்டை வெளியே தெரிகின்றன. கடந்த 1948ம் ஆண்டு பவானியாறும், மோயாறும் கூடுமிடத்தில் கீழ்பவானி அணை கட்டும் பணி துவங்கியது.

இதனால், அணை நீர்த்தேக்கப்பகுதியில் இருந்த வடவள்ளி, பீர்கடவு, பட்டரமங்கலம், குய்யனூர் உள்ளிட்ட 5 கிராம மக்களுக்கு பண்ணாரி வனப்பகுதியில் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அணைக்குள் இருந்த பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் பத்திரமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், பவானிசாகரில் கீழ்பவானி வாயக்காலின் வலதுபுறத்தில் கோயில் கட்டப்பட்டு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1953ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. அணைக்குள் நீரில் மூழ்கிய கிராமங்கள் இருந்த சுவடு காணாமல் போய்விட்டன. ஆனால், டணாய்க்கன் கோட்டையில் உள்ள மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை நீர்மட்டம் குறைந்த காலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

தற்போது அணையின் நீர்மட்டம் 51 அடியாக உள்ளதால் மாதவராய பெருமாள் கோயில் முழுவதுமாக காட்சியளிக்கிறது. இன்னும் 12 அடி நீர்மட்டம் குறைந்தால் சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு முழுவதுமாக காட்சியளிக்கும். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் இவை என கல்வெட்டுக்கள் மற்றும் வரலாறுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கல்வெட்டுகளை தொல்லியல் வல்லுனர்கள் ஆராய்ந்தால் மேலும் பல வரலாறு தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், இக்கோயில்களை பொதுமக்கள் சென்று பார்க்க வசதி இல்லை. எனவே, அணையில் நீர்மட்டம் குறைந்த காலங்களில் இக்கோயில்களை காண பொதுப்பணித்துறை படகு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: