மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் : பொன்குமார் பேட்டி

சென்னை: “மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் சந்தித்து பேசினார். பின்னர் பொன்குமார் அளித்த பேட்டி: நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தல், மக்களவை தேர்தலில் திமுகவும், திமுக தலைமையிலான அணியின் வேட்பாளர்களும் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

மத்தியில் உள்ள மோடியின் சர்வாதிகார ஆட்சியின் எதிர்ப்பலையும், தமிழகத்தில் உள்ள செயல்படாத எடப்பாடி அரசின் வெறுப்பலையும் மக்களை திமுக அணிக்கு வாக்களித்திட வைத்துள்ளது. மக்களின் எதிர்ப்பலையை உணர்ந்த பின் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்ட அதிமுக அணி, திமுக அணியின் வெற்றியை தடுத்திட கடைசி முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாமல் போனதால் வாக்கு பெட்டிகளையே வாங்கிடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதால் தான் உள்ளாட்சி தேர்தலையும் நடத்தாமல், நீதிமன்றத்தில் வாய்தா வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை போன்று தமிழகத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அதற்கு முத்தாய்ப்பாய் இந்த 4 தொகுதிகளின் வாக்காளர்கள் வெற்றியை திமுகவிற்கு அளித்திட வேண்டும். திமுக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிட விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி மற்றும் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் கடும் களப்பணியாற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: