பெரியார் பஸ்ஸ்டாண்ட் போக்குவரத்து நெரிசலால் மதுரையில் மக்களுக்கு 2 ஆண்டுகள் அவஸ்தை உறுதி

மதுரை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமானப் பணியால் பெரியார் பஸ்ஸ்டாண்ட் சுற்றுப்புற பகுதியில்  ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் இன்னும் 2 ஆண்டுகளுக்கு மதுரை மக்களை அவதிக்கு ஆளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டுகளை இணைத்து  7.47 ஏக்கர் இடத்தில் ரூ.159.70 கோடியில் புதிய அதிநவீன பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட உள்ளது.

இதற்காக இரு பஸ்ஸ்டாண்டுகளிலும் இருந்த 446 கடைகள் காலி செய்யப்பட்டு முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பெரியார் பஸ்ஸ்டாண்டில் உள்ள மாடிக்கட்டடம் இன்னும் இடிக்கப்படவில்லை. ஆனால் ஷாப்பிங் காம்பளக்ஸ் பஸ்ஸ்டாண்டில் இருந்த கடைகள் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டு விட்டது.  ஷாப்பிங் காம்பளக்ஸ் பஸ்ஸ்டாண்டை சுற்றிலும் தகர சீட்டுகளால் வேலி அடைக்கப்பட்டுள்ளது. அதிநவீன பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணி முடியும் வரை டவுன் பஸ்கள் நிறுத்துவதற்கு எல்லீஸ் நகர், டிபிகே ரோடு, கிரைம் பிராஞ்ச், ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில், திண்டுக்கல் ரோடு கோட்டை, பழைய விரைவு போக்குவரத்துக் கழக பஸ் ஸ்டாண்ட் உட்பட 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

alignment=

இதனால் பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினமும் பொதுமக்களின் பாடு திண்டாட்டமாகத் தான் போகிறது. பல்வேறு குழப்பங்களால் பஸ் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் தினமும் திணறி வருகின்றனர். இதனால் பெரியார் பஸ்ஸ்டாண்ட் சுற்றுப்புற பகுதியில் கடுமயைாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சரியான திட்டமிடல் இல்லாமல் மாநகராட்சி பஸ்ஸ்டாண்டுகளை மூடி பணிகளை மேற்கொண்டு வருவதால் போக்குவரத்து பிரச்னை தலைதூக்கியுள்ளது. பெரியார் பஸ்ஸ்டாண்டை கட்டி முடிக்க இன்னும் 18 மாதங்களாகும். பணிகள் முழுமையாக 2 ஆண்டுகளாகலாம். அதுவரை பொது மக்கள் அவதிப்படப்போவது உறுதியாகியுள்ளது என பயணிகள் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘மாநகராட்சி, போலீஸ், மாவட்ட நிர்வாகம் இணைந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதி நெரிசல் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: