கருக்கலைப்புக்கான அவகாசம் 24 வாரமாக நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கருக்கலைப்புக்கான காலத்தை 24 வாரமாக நீட்டிக்கும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குவது குறித்து பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதித்துறை) சார்பில், ஐகோர்ட் கிளையில் தாமாக முன்வந்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு: கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது மத்திய அரசின் கேபினட் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சட்டப்படி 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை மட்டுமே கலைக்க முடியும்.

ஆனால் கருவின் உடல் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்டவை 20 வாரங்களுக்கு பின்பே தெரியவரும். இதுபோன்ற நிலையில், கருவை கலைக்க வேண்டியிருந்தால், நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இதனால், சட்டப்படி கருவை கலைப்பதற்கான கால அவகாசத்தை 24 வாரமாக நீட்டிக்க கடந்த 2014ல் பரிந்துரைக்கப்பட்டு கேபினட் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. எய்ம்ஸ் அறிக்கைப்படி, மாதந்தோறும் மூன்று அல்லது நான்கு பெற்றோர் இதுபோல 20 வாரங்களை கடந்த குறைபாடுடைய கருவை கலைக்க அனுமதி கேட்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுபோக, பாலியல் வன்முறைகளால் கருவை சுமக்கும் இளம் பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோரும் 20 வாரங்களுக்குள் கருவை கலைக்க முடியாத நிலையில் நீதிமன்றத்தையே நாடுகின்றனர். மருத்துவ கருக்கலைப்புச் சட்டப்படி, கருக்கலைப்புக்கான காலத்தை 24 வாரமாக உயர்த்தும் திருத்தத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி உத்தரவிட வேண்டும். பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கருவை கலைக்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்யக்கூடாது.  கட்டாயம் கருக்கலைப்பு செய்யவும் உத்தரவிட வேண்டும்.

கருவின் உடல் மற்றும் மன வளர்ச்சி குறைபாட்டை கண்டறிவதற்கான இயந்திரங்களை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வோருக்கு உரிய மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் மனுவுக்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 26க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: