நான் விட்ட சாபத்தால்தான் கர்கரே காலியாகி விட்டார்: பெண் துறவி பிரக்யா சிங் சர்ச்சை

கடந்த 2008 செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிராவின் மாலேகாவ் நகரில் மோட்டார் சைக்கிளில் குண்டு வெடித்து 6 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக பெண் துறவியான பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்பதால் பிரக்யா சிங்  குற்றமற்றவர் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) கடந்த 2015ம் ஆண்டு கூறியது. எனினும், குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் அவருக்கு  சொந்தமானது என்பதால், வழக்கில் இருந்து அவரை விடுவிக்க விசாரணை நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால், பிரக்யா சிங் மீது மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு  சட்டத்தின் கீழ் (மொக்கா) பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த 2017ல் ரத்து செய்து, ஜாமீன் வழங்கியது. ஆனால், சட்ட விரோத நடவடிக்கைகள்  சட்டத்தின் கீழ் அவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். பிரக்யா சிங் கடந்த புதன்கிழமை பாஜ.வில் சேர்ந்தார். உடனே, அவருக்கு மத்திய  பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் மக்களவைத் தொகுதியில் சீட் வழங்கப்பட்டது. அவர்,  காங்கிரஸ் மூத்த வேட்பாளர் திக்விஜய் சிங் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார். தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை வேட்பாளராக நிறுத்திய பாஜ.வை  எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

இந்நிலையில், புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரக்யா. கடந்த 2008, நவம்பரில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்போதைய மகாராஷ்டிரா  தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார். மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் பிரக்யா சிங்கை இவர்தான் முதலில் கைது செய்தார்.இவர் பற்றி பிரக்யா சிங் நேற்று அளித்த பேட்டியில், “எனக்கு எதிராக ஆதாரம் இல்லாவிட்டால்,  என்னை விடுதலை செய்யுங்கள் என கர்கரேயிடம் நான் கேட்டுக் கொண்டேன்.  ஆனால் அவர், ‘ஆதாரத்தை கொண்டு வருவேன். உங்களை விட மாட்டேன்’ என்று கூறிவிட்டார். அப்போது நான், ‘நீங்கள் அழிந்து போவீர்கள்’ என்று சாபமிட்டேன். தீவிரவாதிகள் தாக்குதலில் அது நடந்து விட்டது” என்றார். இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

போட்டியிட தடை?

போபால் மக்களவை தொகுதியில் பிரக்யா சிங் போட்டியிடுவதை எதிர்த்து, மாலேகாவ் குண்டு வெடிப்பில்  தனது மகனை இழந்த ஒருவர் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு  ஏஜென்சி (என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் சையத் நிசார் அகமது (59). அவர் தனது மனுவில், ‘பிரக்யா சிங் தனக்கு மார்பக புற்றுநோய்  இருப்பதாகவும், யாருடைய ஆதரவும் இன்றி நடக்கக்கூட முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், இப்போது  தேர்தலில் நிற்கும் அளவுக்கு அவரின் உடல்நிலை தேறியிருக்கிறது. மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன்தான் வழங்கி இருக்கிறது. எனவே, அவர் தேர்தலில்  போட்டியிட தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

பகிரங்க மன்னிப்புபிரக்யாவின் கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தீவிரமானதை  தொடர்ந்து, தனது கருத்துக்காக பிரக்யா நேற்றிரவு பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: