தேர்தல் நடத்தை விதிமீறல்..: யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மாயாவதி, முஸ்லிம்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது என கூறினார். 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம், சாதி மற்றும் மதத்தினை தேர்தல் பிரசாரங்களில் உபயோகிக்க தடை விதித்துள்ளது. எனவே, யோகி மற்றும் மாயாவதி ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் புகார் எழுந்தது. இதனடிப்படையில், முதல்கட்ட விசாரணையில் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர், இன்று மாலைக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: