ராமநாதபுரத்தில் பாஜவுக்கு ‘தண்ணி’ காட்டும் மும்மூர்த்திகள்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு எம்பியாக அதிமுகவை சேர்ந்த அன்வர்ராஜா, 4,05,945 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் முகமது ஜலீல் 2,86,621  வாக்குகள் பெற்றார். பாஜ வேட்பாளர் குப்புராம் 1,71,082 ஓட்டுகள் பெற்று 3ம் இடம், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 62,160 வாக்குகள் பெற்று நான்காமிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற பின்னர் அன்வர்ராஜா எம்பி தொகுதியை கவனிக்காமலே விட்டு விட்டார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களில் அடிப்படை  வசதிகளை மேம்படுத்தவில்லை. இதனால் வெளிமாநில பக்தர்கள் அவதியடைகின்றனர்.மீன் வர்த்தகம் பாதிப்பு தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, தொடங்கப்பட்ட சேது கால்வாய் திட்டம் தற்போது வரை கானல் நீராக உள்ளது. இத்திட்டம் தொடங்கினால் ராமேஸ்வரம் பகுதி துறைமுகம் ஆகும்.  இதனால் தொழில் வளர்ச்சி அடையும். ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும், இலங்கை கடற்படையால் இன்னல்களை சந்திக்கும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும் ராமநாதபுரம் அதிமுக எம்பி அன்வர்ராஜா  மக்களவையில் குரல் கொடுக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் பல்லாயிரம் கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், ராமநாதபும் மாவட்ட அதிமுகவில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. சிட்டிங் எம்பியான அன்வர்  ராஜாவுக்கும்,  அமைச்சர் மணிகண்டனுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாக உள்ளது.

இம்முறை மும்முனை போட்டியாக இருந்ததால் கடைசியில் தொகுதியை பாஜவுக்கு அதிமுக தலைமை ஒதுக்கியது. இதனால் மூவருமே கடும் அதிருப்தியில் வேண்டா வெறுப்பாக பாஜ வேட்பாளரான நயினார் நாகேந்திரனுடன்  சுற்றி வருகின்றனர். இத்தொகுதியை பொறுத்தவரை அதிமுக தரப்பில் பாஜ வேட்பாளருக்கு போதிய ஆதரவு தருவதில்லை என புகார் உள்ளது. அமுமுக சார்பில் வ.து.நடராஜன் மகன் ஆனந்த் போட்டியிடுவதும் அவர்களுக்கு பின்னடைவு. ராமநாதபுரத்தை சேர்ந்த தமாகா கட்சியின் முன்னாள் எம்எல்ஏவான ஹசன் அலி, பாஜவுக்கு எதிராக பிரசாரம் செய்வதாக கூறி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்வர்ராஜாவுக்கு சீட் தராதது, ஹசன் அலியின் எதிர்  பிரசாரம் போன்றவற்றால், பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பீதியில் உள்ளார். அதிமுகவில் நிலவும் கோஷ்டி பூசலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளரான  நவாஸ் கனி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். யாரையும் சாடாமல் தொகுதிக்கான நலத்திட்டங்கள் குறித்து இவர் பிரசாரத்தில் பேசி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: