“ஆண்டுக்கு 2 கல்வி ஆண்டு முறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானிய குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்”: எம். ஜெகதேஷ் குமார் பேச்சு

நீலகிரி : “ஆண்டுக்கு 2 கல்வி ஆண்டு முறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானிய குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்” என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். ‘ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமியங்களை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரு நாள் மாநாடு இன்று (மே.27) தொடங்கியது. மாநாட்டை, தமிழக ஆளுநர்-வேந்தர் ஆர்.என்.ரவி காலை 9.30 மணிக்கு தொடங்கி வைத்தார். மாநாட்டில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் பேசிய பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம். ஜெகதேஷ் குமார்,”ஆண்டுக்கு 2 கல்வி ஆண்டு முறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானிய குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும். உயர்கல்வி சேர்க்கைக்கு பள்ளி பாடங்களில் குறிப்பிடத்தக்க மதிப்பெண் பெற வேண்டும் என வலியுறுத்துவது சரியல்ல. தகுதியான மாணவர்கள் நுழைவு தேர்வை எதிர்கொண்டு உயர்கல்வியில் படிக்க வருவார்கள். 26 கோடி மாணவர்கள் பள்ளிகளில் படிக்கும் நிலையில், 4.36 கோடி பேர் மட்டுமே உயர் கல்விக்கு வருகிறார்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் மீண்டும் கிராமங்களுக்கே செல்கிறார்கள்,”என வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து, பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,”நான் ஆளுநராக பதவியேற்ற போது, தமிழக பல்கலைக்கழகங்கள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக செயல்படும் போக்கை அறிந்து வேதனை அடைந்தேன். இதை மாற்றுவதற்காகவே ஆண்டுக்கு ஒரு முறை துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் மலர வேண்டுமென்றால், கல்வியில் மாற்றங்கள் வர வேண்டும்,”இவ்வாறு கூறினார்.

The post “ஆண்டுக்கு 2 கல்வி ஆண்டு முறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானிய குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்”: எம். ஜெகதேஷ் குமார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: