சட்டசபை தொகுதிகளில் வெற்றிக்கு வியூகம் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினரா நீங்க.. 10,000 வரை அள்ளிக்கொடுக்கிறாங்க..

சட்டசபை தொகுதிகளில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ₹5,000 முதல் ₹10,000 வரை விநியோகிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் அதிமுகவானது பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம்  காண்கிறது. இவ்வாறு கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக அரசு நாடாளுமன்ற தேர்தலை விட சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு 18 தொகுதிகளில் நடக்கும் தேர்தலில் பாதியில்  வெற்றி பெற்றால் மட்டுமே இபிஎஸ் தலைமையிலான அரசு எஞ்சியுள்ள காலத்தில் ஆட்சி நடத்த முடியும்.இல்லாவிட்டால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படக்கூடும். இதனால் சட்டசபை தேர்தலில் எளிதாக வெற்றிபெறும் வகையில் பல்வேறு வியூகங்களை அக்கட்சியினர் வகுத்து வருகின்றனர். இதில் முதலாவதாக அனைத்து இடங்களுக்கும்  சென்று தீவிர பிரச்சாரம் செய்வதும், இதுவரை செய்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடியும் பல இடங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஓபிஎஸ், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்து  வருகின்றனர். இதேபோல் மற்றொரு முக்கிய திட்டமாக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ₹5,000 முதல் ₹10,000 வரை விநியோகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு விநியோகம் செய்வதன் மூலம் எளிதாக  வெற்றியை ருசித்து விடலாம் எனவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகளில் தற்போது அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் பூத்கமிட்டி உறுப்பினர்கள் குஷியடைந்துள்ளனர். இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது:சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாகவுள்ளார். இதற்காக மாவட்டம் தோறும் உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசி எப்படியும் வெற்றி பெற வேண்டும்  அதற்காக முழு உழைப்பையும் கொட்டுங்கள் என்று கூறியிருந்தார். அதன்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

அதேபோல் பூத்கமிட்டி உறுப்பினர்கள் என்பவர்கள் தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களே அந்ததந்த வார்டில் உள்ள மக்களிடம் எளிதாக சென்று வாக்கு சேகரிப்பார்கள். எனவே அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில்,  ₹5,000 முதல் ₹10,000 வரை கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் பூத்கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் உற்சாகமாக பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது. தொடர்ந்து  அடுத்து எங்கு வழங்கலாம் என கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இவ்வாறு கூறினர்.

ஒரு பவுன் தங்க மோதிரம்

பொள்ளாச்சி  மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்பி., மகேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்பி.,வேலுமணி,  துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் நேற்று முன்தினம் பொள்ளாச்சி அருகே வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நா.மூ.சுங்கத்தில் செயல் வீரர்கள் கூட்டம்  நடந்தது. அப்போது பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி  ஜெயராமன், ‘அதிமுக வேட்பாளர் மகேந்திரனின் செயல்பாடு குறித்து எடுத்துரைத்ததுடன். அதிமுக  பூத்கமிட்டியினர் அதிக வாக்குகள் பெற்று தர வேண்டும். இவ்வாறு அதிக வாக்குகள் பெற்று தரும் பூத்களுக்கு அமைச்சர்  எஸ்பி.,வேலுமணி மற்றும் எம்எல்ஏ.,கஸ்தூரி வாசு ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொதித்த ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்குவார் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: