சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தென் கொரியா சாம்பியன்: இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஈபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில், இந்திய அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்திய தென் கொரிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்ற இந்த தொடரில், மொத்தம் 6 அணிகள் லீக் சுற்றில் மோதின. இதில் தலா 13 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப் போட்டியில் நேற்று மோதின. 9வது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரன்ஜீத் அபாரமாக கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். தென் கொரியாவின் ஜங் ஜோங் ஹியுன் 47வது நிமிடத்தில் கோல் அடிக்க சமநிலை ஏற்பட்டது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததால் பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 2 வாய்ப்புகளை மட்டுமே கோலாக்கிய நிலையில், தென் கொரிய வீரர்கள் 4 கோல் போட்டு வெற்றியை வசப்படுத்தினர். அந்த அணி தங்கப் பதக்கத்தை முத்தமிட, இந்திய வீரர்கள் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர். முன்னதாக 3வது இடத்துக்கு நடந்த போட்டியில் மலேசியா 4-2 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. 5வது இடத்துக்கான மோதலில் ஜப்பான் 6-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: