சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் விதிமீறல்; நானும் காவலாளி பேப்பர் கப்; ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம், காத்கோடம் நகருக்கு காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு தேநீர், சூப் வழங்க பயன்படுத்தப்பட்ட காகித கப்பில், பிரதமர் மோடி சமீபத்திய முழக்கமான ‘நானும் காவலாளி’ என்ற ‘சவுக்கிதார்’ வாசகம் இடம் பெற்றிருந்தது. நாட்டில் தேர்தல் நடத்தை விதமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, ரயில்வே துறைச்சார்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்படுவதாக தேநீர் கப்பை புகைப்படம் எடுத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

இந்த புகைப்படமும், காத்கோடகம் சதாப்தி எக்ஸ்ரயிலில் வழங்கப்பட்டது என்கிற வாசகமும் வைரலானது. இதையடுத்து, இந்த விவகாரம் ரயில்வேதுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் ‘சங்கல்ப் அமைப்பு’ என்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த கப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக ‘நானும் காவலாளி’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட அனைத்து காகித கப்புகளையும் ரயில்வே அதிகாரிகள் அவசர அவசரமாக திரும்ப பெற்றனர். இதுக்குறித்து ஐஆர்சிடிசி செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘இதுபோன்ற வாசகங்கள் எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி, எங்களை அறியாமல் விளம்பரம் செய்யப்பட்டுவிட்டது. இந்த காகித கப்புகளை வினியோகம் செய்த ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: