சாரதா நிதி நிறுவனம் மோசடி வழக்கு : ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி : சாரதா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாரதா நிதி நிறுவனம் மோசடி வழக்கு

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா குழுமத்தின் சீட்டு நிதி நிறுவனம், முதலீட்டாளர்களின் பல ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பான வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கை இதற்கு முன்பு விசாரித்த கொல்கத்தா காவல்துறை உயர் அதிகாரி ராஜீவ் குமார், முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இந்நிலையில் ஆவணங்களை அழித்தது தொடர்பான விசாரணைக்கு, மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா காவல் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுப்பதாக சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ராஜீவ் குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என 10 நாட்களுக்குள் சிபிஐ ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த மனு குறித்து ராஜீவ் குமார் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அமர்வு, ஏப்ரல் 8ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: