கோவாவில் புனித வெள்ளி தினத்தில் தேவாலயங்களுக்கு அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை!

பனாஜி : கோவாவில் தேவாலயங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தராகண்ட், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா ஹவேலி, டாமன் டய்யு ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

கோவாவில் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலுடன் சேர்த்து 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. சிரோதா மற்றும் மாண்ட்ரேம், மப்பூசா தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிரோதா மற்றும் மாண்ட்ரேம் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி விலகியதாலும், மப்பூசா தொகுதியில் தேர்வான பாஜக எம்.எல்.ஏ பிரான்சிஸ் டிசோஸா மறைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் கோவாவில் தேவாலயங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

குறிப்பாக புனித வெள்ளி தினத்தன்று தேவாலயங்கள் உள்ள பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள கூடாது என கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களின் புனித பண்டிகையான புனித வெள்ளி தினத்தில் அதிக அளவிலான மக்கள் தேவாலயங்களில் கூடுவார்கள் என்பதால் அவர்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், சட்ட-ஒழுங்கு மீறல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் முயற்சியாகவும் அந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளையடுத்து தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: