விவிபேட் சரிபார்க்கும் விவகாரம் தேர்தல் கமிஷன் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் எண்ணிக்கையை உயர்த்தக் கோரிய வழக்கில் தேர்தல் கமிஷன் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரம் (விவிபேட்) அனைத்து தொகுதியிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இதில், அனைத்து தொகுதியிலும் தலா ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகள், விவிபேட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுடன் சரிபார்த்து சோதிக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்கு இயந்திரங்களை விவிபேட் இயந்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் எனக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 21 கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த பரிந்துரையானது, தற்போதுள்ள நடைமுறை மீது எந்த அவதூறையோ, சந்தேகத்தையோ எழுப்புவது அல்ல. திருப்திக்கானது. எனவே, விவிபேட் இயந்திரத்தை சரிபார்க்கும் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலிக்க வேண்டும். இது குறித்து ஆணையத்தின் பதிலை வரும் 28ம் தேதி தெரிவிக்க வேண்டும். வழக்கு ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: