ஆந்திராவுல எல்லாமே எங்களுக்குத்தான்: மார்தட்டுகிறார் சந்திரபாபு நாயுடு

திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். ஆந்திர தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து தரப்பினரும் பயன் அடையும் விதமாக மாநில அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. குறிப்பாக விவசாயக் கடன், மகளிர் குழு கடன் ரத்து செய்யப்பட்டு, மாநிலத்தை அனைத்து விதத்திலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று வருகிறோம். எனவே இந்த ஐந்து ஆண்டுகள் செய்த நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் கருத்தில் கொண்டு எங்களை மீண்டும் ஆட்சி அமைக்கும் விதமாக ஆசிர்வதிக்க வேண்டும். இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு முதல்வராக வேண்டுமா அல்லது ஜெகன்மோகன் ரெட்டி மூலமாக தெலுங்கானாவை சேர்ந்த சந்திரசேகர் ராவ் ஆட்சி புரிய வேண்டுமா என்பதை வாக்களர்களே  முடிவு செய்ய வேண்டும். ஆந்திராவின் வளர்ச்சியை தடுப்பதற்காக சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி,  மோடி ஆகிய மூவரும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு வராத ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தின் கட்சி அலுவலகத்தில் இருந்தபடி  தெலங்கானாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

தேர்தலுக்கு மட்டும் ஆந்திராவிற்கு வரக்கூடிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளால் உரிய பாடம் புகட்டவேண்டும். ஆந்திராவின் ஒரு தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றாலும் அது சந்திரசேகராவை பலப்படுத்தும் செயல். வாக்காளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துள்ளது. எனவே 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் தங்கள் வாக்குகள் உள்ளதா என்பதை வாக்காளர்கள் அனைவரும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் ஆந்திராவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒருதலைபட்சமாக நடைபெற உள்ளது. 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியே வெற்றி பெறும். எதிர்க்கட்சியே இல்லாத நிலையை வாக்காளர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. திருப்பதியில் எனது தேர்தல் பிரசாரத்தை வெங்கடேஸ்வர சுவாமி முன்னிலையில் தொடங்கி ஸ்ரீகாகுளத்தில் இருந்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: