கேரள பிரசாரங்களில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் ேகாயில் விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா கூறினார். கேரளாவில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் அனைத்து கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. காங்கிரஸ் பா.ஜ. கட்சிகளில் வேட்பாளர் தேர்வு இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா நிருபர்களுக்கு ேபட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜனவரி 30ம் தேதி எடுக்கப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியல்படி கேரளாவில் மொத்தம் 2,54,08,711 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,31,11,189 பெண் வாக்காளர்களும், 1,22,97,403 ஆண் வாக்காளர்களும், 119 திருநங்கைகளும் உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 30.47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வயநாடு மாவட்டத்தில் மிகவும் குறைவாக 5.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனியும் வாய்ப்பு உள்ளது. வேட்புமனு தாக்கல் வாபஸ் பெறும் வரை பெயர்களை சேர்க்கலாம். தற்ேபாது 2 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 24,970 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. எல்லா மையங்களிலும் விவிபேட் வசதி செய்யப்படும். வரும் தேர்தலில் சபரிமலை விவகாரத்தை அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு பயன்படுத்த கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பேசுவது சட்ட விரோதமாகும். எனவே சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடவுளின் பெயரிலோ மதத்தின் பெயரிலோ ஓட்டு கேட்பது சட்டப்படி தவறாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜ எதிர்ப்பு

கேரள  பாஜ பொதுச்செயலாளர் சுரேந்திரன் கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:  சபரிமலை கோயில் விவகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது  என்று கூற தேர்தல் கமிஷனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த விவகாரத்தில்  கேரள அரசின் நிலைப்பாடு குறித்து பாஜ கண்டிப்பாக பொதுமக்களிடம்  எடுத்துரைக்கும். எதற்காக சபரிமலை விவகாரத்ைத தேர்தலுக்கு  பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் கமிஷன் கூறியது என்று தெரியவில்லை.  நீதிமன்ற உத்தரவை எதிர்க்கவோ மதங்களை அவமதிப்பதோ தவறாகும். ஆனால் தேர்தலில் எந்த விஷயம் குறித்து பிரசாரம் செய்யவேண்டும் என்று  தீர்மானிக்கும் உரிமை தேர்தல் கமிஷனுக்கு கிடையாது. அரசியல் கட்சிகள்தான்  அதை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: