சென்னை: காடுவெட்டி குரு மகனின் கல்வி செலவு முழுவதையும் ஏற்க தயாராக இருப்பதாக ராமதாஸ் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது: காடுவெட்டி குருவின் மூத்த சகோதரி செல்வியின் கணவரும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவருமான கருணாகரன் நேற்று என்னை சந்தித்துப் பேசினார். காடுவெட்டி குருவின் பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது மற்றொரு சகோதரியின் கணவர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் செயல்படுவதை எண்ணி தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், இதுபோன்று நடக்கும் என்று தாம் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் கருணாகரன் மிகவும் மனம் நொந்து என்னிடம் கூறினார்.
குருவின் மகள் விருதாம்பிகையின் திருமணம் குறித்து, குருவின் மனைவிக்கும், தனக்கும் தெரியாது என்றும் வேதனையுடன் கூறினார். குருவின் மனைவியை விரட்டியடித்துவிட்டு, அவர்களின் சொத்துக்களை பறித்துக்கொள்ள அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.