மின்வாரிய உதவி பொறியாளர் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம்: லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போடவேண்டும்

* சொத்துக்களை பறிமுதல் செய்யலாம்

* ஐகோர்ட் கிளை நீதிபதிகள் யோசனை

மதுரை: லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய, லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை சூர்யாநகரை சேர்ந்த பரணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நான் எம்இ முடித்துள்ளேன். புதிதாக 325 உதவி பொறியாளர்கள் தேர்வு செய்வது தொடர்பாக மின்வாரியம் சார்பில், கடந்த 2018 பிப்ரவரி 14ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிக்காக அண்ணா பல்கலைக்கழகம் 30.12.2018ல் நடத்திய எழுத்துத்தேர்வில் நானும் பங்கேற்றேன். தேர்வுக்கு முன்பு கேள்வித்தாள் வெளியானது. மின்வாரியத்தில் பணிபுரிவோர் கேள்வித்தாள் விபரங்களை முன்னதாகவே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதுதொடர்பான விசாரணைக்கு அண்ணா பல்கலை துணைவேந்தர் 3.2.2019ல் உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி என்பது இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் ஒரு பணிக்கு 5 பேர் வீதம் 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது. எனவே உதவிப்பொறியாளர் நியமன நடைமுறைக்கு  தடை விதிக்க வேண்டும். மேலும், புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள், ‘‘எழுத்துத்தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைத்தளங்களில் வெளியானது எப்படி? இதனால் மின்வாரிய உதவிப்பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள், ‘‘அரசுத்துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது. சிசிடிவி கேமரா, செல்போன் பயன்பாடுகளால் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டுமென்றால், லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும், தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சப்பழக்கம் ஒழியும். லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும்’’ என தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: