கடந்தவை கையில் இல்லை ... நடப்பவை கையில் உள்ளன : வர்த்தக மாநாட்டில் மோடி பேச்சு

புதுடெல்லி: “கடந்து முடிந்தவை நம் கைகளில் இல்லை. ஆனால், நடப்பவையும், இனிவரும் காலமும் நம் கைகளில் உள்ளன’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.‘எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த 2014ம் ஆண்டுக்கு முந்தைய ஆட்சியில் ஊழல், கால தாமதம் செய்வதில் போட்டி இருந்தது. அமைச்சகங்கள், தனி நபர்களுக்கு இடையே இந்த போட்டி நிலவியது. யார் அதிகமாக, வேகமாக, புதிய முறையில் ஊழல் செய்கிறார்கள் என்பதில் போட்டி இருந்தது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் என அனைத்திலும் ஊழல் நடந்தது. இந்த ஊழல் போட்டியில் யாரெல்லாம்வீரர்களாக இருந்தனர் என்பது நமக்கு தெரியும். தற்போதைய அரசில், முதலீடுகளை கவருவதிலும், ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதிலும், சிறு கிராமங்களுக்கு சாலை வசதி அமைத்து தருவதிலும், அனைத்து வீடுகளுக்கும் காஸ் இணைப்பு கொடுப்பதிலும், 100 சதவீத கழிப்பறை மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி தருவதிலும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நலத்திட்டங்களின் இலக்கை அடைவதில் அமைச்சகங்கள் இடையே போட்டி நிலவுகிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பதுடன், பணவீக்க விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.  

பாஜ தலைமையிலான 2014-19 இடையேயான ஆட்சி காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 7.4 சதவீதமாகவும், பணவீக்கம் சராசரியாக 4.5 சதவீதமாகவும் இருந்தது. தாராளமயமாக்கலுக்கு பின்னர், வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிகமான பொருளாதார வளர்ச்சியாகவும், குறைந்தளவு பணவீக்கமாகவும் இது கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உயரத்தை எட்ட வாய்ப்புகள் இருந்த போதிலும், முந்தைய ஆட்சியின் கொள்கை முடக்கத்தால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய ஆட்சியில் தயக்கங்கள் நம்பிக்கையாகவும், தடைகள் எதிர்பார்ப்புகளாகவும், பிரச்னைகள் புதிய முயற்சிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. அதனால் தான், மாற்றங்களை நம்மால் கண் கூடாக காண முடிகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக தற்போது 6வது இடத்தில் இருக்கும் இந்தியா, விரைவில் 3வது இடத்தை எட்டும். அப்போது, எண்ணற்ற புதிய தொழில் முயற்சிகள் இந்தியாவில் தொடங்கப்படும். இந்தியா உலக நாடுகளில் முதன்மையாக திகழும். கடந்த 3 தொழில் புரட்சியை இந்தியா தவறவிட்ட நிலையில், 4வது தொழில் புரட்சியில் அதன் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும். கடந்து முடிந்தவை நம் கைகளில் இல்லை. ஆனால், நடப்பவையும், இனிவரும் காலமும் நம் கைகளில் உள்ளன. தொழில் ரீதியிலான நட்புறவு கொள்கைகளால் நாட்டின் வர்த்தகம் மேம்பட்டுள்ளது. ₹40 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி.யின் கீழ் பதிவு செய்ய தேவையில்லை. ₹60லட்சம் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ₹1.5 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தொகுப்பு திட்டத்திற்கு தகுதி உடையவை என வரையறுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

‘தீவிரவாதிகளுக்கு எதிராகத்தான்போராட்டம்’:

ராஜஸ்தான் மாநிலம், டோங் மாவட்டத்தில் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய பிரதமர் மோடி, “உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் இந்தியா மட்டுமல்ல, உலகமே துணை நிற்கிறது. மத்திய அரசு மீதும், எல்லையை பாதுகாக்கும் நம் வீரர்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். இதுபோன்ற தீவிரவாத தாக்குதல் தொடரும் பட்சத்தில், உலக அமைதி என்பது சாத்தியமில்லை. ஆனால், இப்போது தீவிரவாதத்துக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளோம். நாம் காஷ்மீர் மக்களை எதிர்த்து போரிடவில்லை. காஷ்மீர் இளைஞர்களும், மக்களும் தீவிரவாதத்தால் மிகவும் பாதித்துள்ளனர். அவர்களுக்கு அமைதி வேண்டும். காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது போர் தீவிரவாதத்துக்கு எதிராக இருக்கும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: