நாடு முழுவதும் வரும் ஏப்ரல் முதல் இருசக்கர வாகனங்களில் நவீன பிரேக்கிங் தொழில்நுட்பம் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து நிறுவனங்களும் நவீன பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா சிபி ஷைன் மற்றும் சிபி ஷைன் எஸ்பி ஆகிய இரு பைக்குகளிலும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, இந்த இரு மாடல்களும் சிறப்பான பாதுகாப்பு அம்சத்தை பெற்றிருக்கின்றன.
ஏற்கனவே இந்த இரு மாடல்களின் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டுகளில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுவிட்டது. தற்போது, டிரம் பிரேக் மாடல்களிலும் இந்த வசதி கொடுக்கப்பட்டு வந்துள்ளன. பிரேக் பிடிக்கும்போது, நிறுத்துதல் திறனை இருசக்கரங்களுக்கும் குறிப்பிட்ட விகிதத்தில் செலுத்தி, வண்டியை பாதுகாப்பாக நிறுத்தும் சிபிஎஸ் எனப்படும் இந்த காம்பி பிரேக்கிங் சிஸ்டம் 125சிசி ரகத்திற்கும் கீழான மாடல்களில் கட்டாயமாக உள்ளது. அதற்கு மேலான மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாகிறது.