கோவையில் கார் ரேஸ் : இளைஞர் மீது கார் மோதி விபத்தில் கல்லூரி மாணவி மீது வழக்குப்பதிவு!

கோவை : கோவை கொடிசியா சாலையில் கார் ரேஸ் நடத்திய மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்தவர் பாலாஜி என்பவர் பீளமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள இஸ்கான் கோவில் சாலையில் இருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொடிசியா சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் மீண்டும் அதிவேகமாக சென்று விட்டது.

இதையடுத்து படுகாயமடைந்த பாலாஜியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்த பாலாஜியின் தந்தை கார்த்திகேயன், போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், விபத்தை ஏற்படுத்தியது ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவரது மகள் தர்சனா ரூத் என்பது தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தர்சனா ரூத் அவரது தோழியுடன் கார் ரேஷ் நடத்தியதாகவும், 100 கி.மீ வேகத்தில் வந்ததால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவி தர்சனா ரூத் மீது அதிவேகமாக காரை ஓட்டுதல், விபத்தில் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: