தீ பிடிப்பதை உடனடியாக கண்டுபிடிக்க வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 26 இடங்களில் கண்காணிப்பு கேமரா

*  ஆணையர், இன்ஜினியர் வீடுகளில் இருந்தே செல்போனில் பார்க்கலாம்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி குப்பை கிடங்கில் 26 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேற்று முதல் இயங்க தொடங்கின. கேமராவை ஆணையர், இன்ஜினியர் ஆகியோர் வீடுகளில் இருந்தே தங்களது செல்போனில் பார்க்க முடியும். நாகர்கோவில் நகராட்சி சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 52 வார்டுகளை கொண்ட மாநகராட்சியில், நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. குப்பைகளை சேகரிக்க தனியார் மற்றும் நகராட்சி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், நாகர்கோவில் வலம்புரிவிளையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. குப்பை கிடங்கு மொத்தம் 14.5 ஏக்கரில் அமைந்து உள்ளது. தற்போது இங்கு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. மக்கும் குப்பைகள் மட்டுமின்றி பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவையும் இங்கு குவிக்கப்பட்டு உள்ளன. இந்த குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் மாற்று இடம் கிடைக்க வில்லை.

இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துக்களும் ஏற்படுகின்றன. கடந்த மாதம் ஏற்பட்ட தீயை 4 நாட்கள் வரை போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கோடை காலத்தில் அடிக்கடி தீ விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. குப்பையின் அடிப்பகுதியில் தீ பிடித்து புகை மண்டலமாக மாறிய பின்னரே தீ விபத்து குறித்து தகவல் வருகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் உள்ளது.

மேலும் விஷமிகள் சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த குப்பை கிடங்கில் பாதுகாப்பு கருதியும், தீ பிடித்து எரியும் பகுதியை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி இன்ஜினியர் பால சுப்பிரமணியம், நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் கொண்ட குழுவினர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது கேமரா அமைக்கும் பணிகள் முடிவடைந்து, நேற்று முதல் இவை செயல்பட தொடங்கின. இந்த குப்பை கிடப்பில் மொத்தம் 26 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒரு கேமராவின் மதிப்பு ரூ. 9 ஆயிரம் ஆகும். இந்த கேமராக்கள் மூலம் இரவு நேரங்களில் கூட 50  மீட்டர் சுற்றளவுக்கு எளிதில் காட்சிகளை பார்க்க முடியும். 3 மாதங்கள் வரை காட்சிகள் பதிவாகி இருக்கும். இதற்கான கட்டுப்பாட்டு அறை, குப்பை கிடங்கின் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து 24  மணி நேரமும் பணியாளர் ஒருவர் கேமராவை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இது மட்டுமின்றி ஆணையர் சரவணக்குமார், இன்ஜினியர் பாலசுப்பிரமணியம், நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் எங்கிருந்தாலும் தங்களது செல்போனில் இந்த கேமராக்களை பார்க்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. எனவே வெளியூர், வெளிநாடுகளில் இருந்தாலும் கூட இவர்கள் தங்களது செல்போன் அப்ளிகேஷன் மூலம் இந்த கேமரா காட்சிகளை பார்க்க முடியும். இந்த கேமராக்கள் தண்ணீர் விழுந்தாலும் கூட பாதிக்காது. மழை சமயங்களிலும் கேமரா காட்சிகளை பதிவு செய்யும். இந்த கண்காணிப்பு மூலம் குப்பை கிடங்கில் யாராவது அத்துமீறுகிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும் என நகராட்சி அலுவலர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: