அரசு வேலை, கல்லூரி சீட் வாங்கி தருவதாக 45 லட்சம் மோசடி: தலைமை செயலக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் அதிரடி கைது

* தப்பி ஓடிய ஆயுதப்படை காவலருக்கும் போலீஸ் வலை

* பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு படையெடுப்பு

சென்னை: அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்த தலைமை செயலக பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஆயுதப்படை காவலரான அவரது கணவரை தேடி வருகின்றனர். சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் நாசர் மற்றும் அவரது நண்பர் ரமேஷ்(40) ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  கடந்த ஆண்டு ஜூலை மாதம் புகார் ஒன்று அளித்தனர். அந்த புகாரில், தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலராக பணியாற்றி வரும் அன்னிபெசன்ட்(39) மற்றும் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் அவரது கணவர் முருகன் ஆகியோர், தலைமை செயலகத்தில் எனக்கு அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்று கூறி உங்களுக்கு தெரிந்த நபர்கள் இருந்தால் சொல்லுங்கள் அவர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.

அதை நம்பி நாங்கள் எங்கள் உறவினர்களுக்காக ரூ.4 லட்சம் பணம் கொடுத்தோம். ஆனால் சொன்னப்படி அவர்கள் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டால் அவர்கள்  மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இருவரிடம் இருந்த பணத்தை பெற்று தரவேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஐசிஎப் காவல் நிலைய இன்ஸ்ெபக்டருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் ேநற்று அன்னிபெசன்ட்டை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பணம் ெபற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அதிரடியாக பெண் காவலர் அன்னிபெசன்ட்டை கைது  ெசய்தனர்.

பெண் காவலர் அன்னிபெசன்ட்டிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

அன்னிபெசன்ட் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார். இதனால், அவருக்கு அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் பழக்கம் என்று தெரிந்து காவலர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கூறி வந்துள்ளார். அப்போது, யாருக்காவது தலைமை செயலகத்தில் அரசு வேலை வேண்டும் என்றால் நான் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். அதை நம்பி காவலர்கள் சிலர் மற்றும் அவர்களின் உறவினர்கள் அன்னிபெசன்ட்டை அணுகி உள்ளனர். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர், படிப்புக்கு ஏற்ற வகையில் ரூ.1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பணத்தை வாங்கியுள்ளார். அனைத்து பணத்தையும் அவரது கணவர் முருகன் மூலம் பெற்று தங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர்.

 பணம் கொடுத்த நபர்கள் கேட்டால் அவர்களை தலைமை செயலகத்திற்குள் அழைத்து சென்று பணிகள் நடப்பது போன்று நம்ப வைத்து திரும்ப அனுப்பிவிடுவார். இதுபோல்,ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த செந்தில் என்பவரிடம் தன்னுடைய மகளுக்கு கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம், மயிலாப்பூரை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகளுக்கு கல்லூரியில் சீட் வாங்கி தர ரூ.1.20 லட்சம், வில்லிவாக்கத்தை சேர்ந்த முரளிதரன் என்பவரின் மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம், வில்லிவாக்கம் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு தலைமை செயலகத்தில் ஓட்டுனர் வேலை வாங்கி தர ரூ.1.30 லட்சம் என 16 பேரிடம் ரூ.44 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இந்த மோசடியில் கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் பலரிடம் பல லட்சம் மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது குறித்து நாங்கள் அன்னிபெசன்ட்டிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அன்னிபெசன்ட் கணவர் முருகனை போலீசார் தேடி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட அன்னிபெசன்ட் கைது ெசய்யப்பட்ட தகவல் வெளியானதால் பாதிக்கப்பட்டவர்கள் ஐசிஎப் காவல்நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: