2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகளிடம் விசாரணை

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவியது தொடர்டாக டாக்டர், நர்சுகளிடம் விசாரணை நடக்கிறது. திருச்சியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன் திருப்பூரில் வசித்து வருகிறார். இதய நோய் இருப்பதாக இவரது 2 வயது பெண் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தைக்கு ரத்த சிவப்பணு பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. ரத்தம் ஏற்றிய பின்னர், குழந்தையை கடந்த ஜூலை 13ம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். கடந்த 8ம் தேதி குழந்தையின் உடலில் ஆங்காங்கே தடிப்பு, கட்டி ஏற்பட்டது. மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் ேசர்த்தபோது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கோவை அரசு மருத்துவமனையில் எச்ஐவி ரத்தத்தை  குழந்தைக்கு செலுத்திவிட்டதாக தந்தை புகார் கூறினார். இதற்கு, அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட குழந்தை, அரசு மருத்துவமனையில் கூட்டு மருந்து சிகிச்சை பிரிவில் (ஏ.ஆர்.டி) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று குழந்தைகள் சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, இதய நோய் பிரிவு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், நர்சுகள், ஆய்வக ஊழியர்கள், ரத்த வங்கி ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கொடையாக பெறப்பட்ட ரத்தம், அதை வழங்கியவர், சேமிக்கப்பட்ட நாட்கள், குழந்தைக்கு வழங்கப்பட்ட ரத்தம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, குழந்தைக்கு திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையிலும், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளிலும் 6-3-17க்கு பிறகு விஸ்வநாதனின் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளதா என்று ஆய்வு நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி, நேற்று திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், திருச்சி தலைமை மருத்துவமனையில் மட்டுமே அவர்கள் சிகிச்சை பெற்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சம்சத் பேகம் கூறுகையில், ‘‘எச்ஐவி உள்ள குழந்தைக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை தவிர வேறு எங்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: