தங்கச்சிமடம் மீனவர்களுக்கு வழங்க ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கொச்சியில் வெள்ளோட்டம்

ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தை சேர்ந்த 4 மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்க நவீன படகுகளின் வெள்ளோட்டம் கொச்சியில் நேற்று நடைபெற்றது.கடலோர மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆழ்கடல் மீன்பிடி படகு திட்டம் துவங்கப்பட்டது. கடந்த 2018ல் அறிமுகம் செய்யப்பட்ட  இந்த திட்டத்தில் ஒரு படகு தயாரிக்க சுமார் ரூ.81 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இதில் 70 சதவீத மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. மீதமுள்ள தொகையில் 20 சதவீதம் வங்கிக்கடனும், 10 சதவீதத்தை முதலீடாகவும் மீனவர்கள் செலுத்த வேண்டும்.  அதனடிப்படையில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

முதல் கட்டமாக 300 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆனந்தபைரவா, ஷேக் இருதயம், விண்ணரசன், ரெஜில் ஆகிய 4 மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தயாரிக்கும் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், படகுகளின்  சோதனை ஓட்டம் கேரள மாநிலம், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடைபெற்றது. இதனை காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏராளமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகிற்கு விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக 4 படகுகள் தயார் நிலையில் உள்ளது. முழுமையான சோதனை ஓட்டம் செய்து 10 நாட்களில் மீனவர்களிடம் மீனவர்களிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: