கடலூர்: ஒரு காலத்தில் மீனவர்களின் வழிபாட்டிற்கு உரிய மீனாக கொம்பன் திருக்கை இருந்து வந்தது. அரிதாக பிடிபடும் இந்த மீன்கள் வலையில் சிக்கினால் அவற்றை மீண்டும் கடலில் விட்டுவிடுவது மீனவர்களின் வழக்கம், டால்பின், கடலாமைகள் பட்டியலில் கொம்பன் திருக்கையும் இடம் பெற்றிருந்ததால் மீனவர்கள் இவற்றிற்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். நாளடைவில் கொம்பன் திருக்கை எனப்படும் கோட்டுவாலன் திருக்கை மீன்கள் மருத்துவ குணங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டன. உடல் சூடு தணியவும், மூட்டுவலி தீரவும், நரம்பு தளர்ச்சிக்கு தீர்வாகவும், ஆண்மை விருத்திக்காகவும் இந்த மீன் உணவு மருந்தாக பயன்பட்டது.
அதனை கருவாட்டிற்காகவும், சுவையான குழம்புக்காகவும் கேரளா, ஆந்திர மாநில பகுதி மக்களால் மிகவும் விரும்பப்பட்டதால் இவ்வகை மீன்கள் வலையில் கிடைத்தால் இப்போதெல்லாம் மீனவர்கள் அவற்றை விற்றுவிடுகின்றனர். கடலூர் துறைமுகத்தில் ஆழ்கடல் மீன் பிடி படகு வலையில் சுமார் 15 டன் கொம்பன் திருக்கை பிடிபட்டன. அவை துறைமுகத்தில் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குருவி திருக்கை, புள்ளி திருக்கை ஆகியவற்றை விட இவ்வகை திருக்கை குறைந்த விலையே மதிப்பிடப்படுகிறது. இதனால் டன் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு பாதி கருவாட்டிற்காகவும், மீதி வெளி மாநிலங்களுக்கும் கொண்டுச் செல்லப்பட்டது. இந்த திருக்கையை ஏராளமானோர் துறைமுகத்திற்கு வந்து வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி