போலீசார் போல் நடித்து பக்ரைன் வாலிபர்களிடம் ரூ.2.64 லட்சம் கரன்சி அபேஸ்: காரில் தப்பிய கும்பலுக்கு வலை

வேளச்சேரி: பக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் காலித் அபுதாட்டி (36), மொய்தீன் (34). இருவரும் நண்பர்கள். புற்றுநோயால் பாதித்த மொய்தீனை, காலித் அபுதாட்டி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் பெரும்பாக்கத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி இருவரும் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் இவர்களது வீட்டுக்கு காரில் வந்த 2 பேர், ‘‘நாங்கள் போலீஸ். உங்களது அறையை சோதனை செய்ய வேண்டும்’’ என கூறினர். பின்னர் சோதனை செய்வதுபோல் நடித்து, அவர்கள் வைத்திருந்த ரூ.2.64 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறித்துக்கொண்டு காரில் ஏறி தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

* பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக ஆடு, மாடுகளை திருடி வந்த பழவந்தாங்கல் கண்ணன் காலனியை சேர்ந்த ஸ்டாலின் (19), பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

* நுங்கம்பாக்கம் ராமதெருவை சேர்ந்த தருண் ரோஷன் (8), அருகில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு பிடித்து வந்தான். இச்சிறுவன், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த விகன் என்பவருடன் பைக்கில் தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது, மாநகர பஸ் பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தான். பைக் ஓட்டி வந்த ஆனந்த விகன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாநகர பேருந்து டிரைவர் சங்கர் (38) என்பவரை கைது செய்தனர்.

* மணலி புதுநகர் மசூதி தெருவை சேர்ந்த கொத்தனார் பலராமன் (45) அதே பகுதியில் உள்ள வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, உதவி செய்வது போல் நடித்து, பலராமனிடம் இருந்து ரூ.11 ஆயிரத்தை பறித்து சென்ற மணலி சின்ன மாத்தூர், ஆம்ஸ்டிராங் தெருவை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் 6வது தெரு சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமராக்களை உடைத்த அதே பகுதி ஸ்கூல் சாலை 6வது தெருவை சேர்ந்த கிஷோர் குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்த அருள்பிரசாத் (28), நேற்று முன்தினம் இரவு தனது சரக்கு வாகனத்தில் குளித்தலையில் இருந்து வாழைத்தார் ஏற்றிக் கொண்டு கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தார். பெருங்களத்தூர் ஏரிக்கரை சிக்னல் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சிக்னல் மீது மோதியதில் சிக்னல் சேதமடைந்தது.

குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அருள் பிரசாத்தை கைது செய்தனர்.

5 ரவுடிகளுக்கு குண்டாஸ்

சூளைமேட்டை சேர்ந்த ரவுடி குமரேசன் கொலை வழக்கில் கைதான சகாயம், கார்த்திக், தர், கான குரு, தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன் பேரில் 5 பேரும் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: