தாம்பரம், மூவரசன்பட்டு பகுதியில் விஷம் வைத்து 32 நாய்கள் கொலை

சென்னை: தாம்பரம், மூவரசன்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களில் 32க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழவந்தாங்கல் அடுத்த மூவரசன்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறப்பது அதிகரித்து வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் 2 நாய்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசில் நேற்று முன்தினம் இந்து முன்னணியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரசன்பட்டு பகுதியில் இறந்து கிடந்த 2 நாய்களின் உடலை கைப்பற்றி, வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் ஆய்வில், உணவில் விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.

Advertising
Advertising

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘மூவரசன்பட்டு பகுதியில் தனிநபர்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவற்றை அங்கு சுற்றி திரியும் நாய்கள் கடித்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் விஷம் வைத்து கொன்றிருக்கலாம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்றனர். இதேபோல், மேற்கு தாம்பரம், ஜெருசலேம் நகர், டி.டி.கே நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. இதுவரை அங்கு 12 நாய்கள் வரை இறந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் மர்மமான முறையில் 6 நாய்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு தெருநாய்கள் இடையூறாக உள்ளதால், உணவில் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: