பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தி போளூரில் விஷம் குடித்து தலைமை காவலர் தற்கொலை

ஆரணி: பதவி உயர்வு கிடைக்காததால் போளூரில் தலைமை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்  முனியன்(45). போளூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி(40). திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 30ம் தேதியில் இருந்து முனியன் 15 நாட்கள் விடுப்பில்  இருந்தார். இவர், நேற்று அய்யம்பேட்டையில் உள்ள குளக்கரை அருகே மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள்  அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முனியன் தலைமையிலான போலீசார் ஒரு கைதியை நீதிமன்றம் அழைத்து சென்றனர். அப்போது, அந்த கைதி தற்கொலை செய்து கொண்டார். முனியன் மற்றும் போலீசாரின் அலட்சியத்தால்தான் கைதி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக, முனியனுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் கிடைக்கவில்லை. இதனால், மனவேதனையில் இருந்து வந்த முனியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், முனியனுக்கு பணிச்சுமை அதிகரித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீசார் வழக்குப்பதிந்து முனியனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: