விவசாயிகள் வேதனை: சின்னதம்பி யானையால் வாழ்வாதாரம் பாதிப்பு

உடுமலை: சின்னதம்பி யானையால் எங்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது என உடுமலை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சின்னதம்பி யானை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சின்னதம்பி யானை வனப்பகுதிக்கும், மனிதர்கள்  வாழும் பகுதிக்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ பழகிவிட்டது. 15 அடி தூரத்தில் மனிதர்கள் நின்றாலும் அதை கண்டு கொள்வதில்லை. எனவே, அதனை  பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:  நாங்கள் கொஞ்ச நிலங்களை வைத்து அதில் வாழை, நெல், கரும்பு பயிரிட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். தற்போது இந்த  பகுதியில் 13 நாட்களாக சின்னதம்பி யானை உலா வருவதால், விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை பார்க்க முடியவில்லை. மேலும் பயிரிட்டுள்ள நெல்,  வாழை, கரும்புகளையும் சின்னதம்பி யானை நாசமாக்கி வருகிறது. இது எங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அணையில் இருந்து ஒரு  போகத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. இந்த தண்ணீரை வைத்துதான் நாங்கள் பயிரிட்டு வருமானம் ஈட்டி குடும்பத்தை நடத்துகிறோம். இந்த தண்ணீரை  பயன்படுத்தாவிட்டால் பல மாதங்கள் கழித்துதான் மீண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அது வரை விவசாயம் செய்ய முடியாது. எனவே  சின்னதம்பி யானையை பிடித்து வேறு பகுதிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர். விரைவில் தீர்வு: சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்னதம்பி யானை குறித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, சின்னதம்பி யானை வனத்துக்குள் போக மறுப்பதாலும், விவசாய பயிர்களை தின்று பழகிவிட்டதாலும் அதை முகாம் யானையாக  மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஓரிரு தினங்களில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: