போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப கால அவகாசத்தை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், எஞ்சியவர்கள் இன்று மாலை 7 மணிக்குள் பணிக்கு திரும்பமாறு, பள்ளிக்கல்வித்துறை இறுதி கெடு விதித்துள்ளது. இன்று மாலை 7 மணிக்குள் பணிக்குத் திரும்பினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதை மீறி, இன்று மாலை 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதி 17பி-யின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதி 17பி-யின்படி ஊதியத்தை குறைத்தல், தொலைதூர பணியிட மாற்றம், பணி உயர்வை நிறுத்தி வைத்தல், பணி உயர்வை ரத்து செய்தல், பணியிடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும் நிலையில், அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், அவர்கள் தரும் விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால், 17பி விதியின் கீழ் பணிநீக்க நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளர். முன்னதாக இன்று மாலை 5 மணி வரை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப கால அவகாசம் கொடுத்த நிலையில், மேலும் 2 மணி நேரம் அவகாசத்தை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: