காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு மின்வாரியம் ரூ.1,000 கோடி பாக்கி: வங்கிக்கு கடனை கட்ட முடியாமல் அவதி

சென்னை: தமிழகம் முழுவதும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு மின்வாரியம் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் காற்றாலை இயந்திரங்களை அமைப்பதற்காக  வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை, திரும்ப செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி சராசரி மின்தேவையின் அளவு, 15,300 மெகாவாட்டாக இருக்கிறது. இதில் குறிப்பிட்ட  சதவீதத்திற்கான மின்தேவையினை காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பூர்த்தி செய்கின்றனர். இவ்வகையிலான உற்பத்தி நிலையங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில்,  8,300க்கும் மேற்பட்ட மெகாவாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் ஒருபகுதியை, அதை அமைத்த நிறுவனங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு பகுதியை  மின்வாரியத்திற்கு விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு விற்பனை செய்யும் மின்சாரத்தை, வாரியம் ஒரு யூனிட், 2.70 ரூபாய் முதல் 4.16 ரூபாய் வரை கொடுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான காற்றாலைகள், வங்கியில் நிதி உதவி பெற்று அமைக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம், காற்றாலை உற்பத்தியாளர்களிடமிருந்து பெறும்  மின்சாரத்திற்கான விலையை, சில ஆண்டுகளாக கொடுக்கவில்லை என்று, அதன் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தற்ேபாதைய நிலவரப்படி, 1000 கோடி ரூபாய் அளவுக்கு பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.  காற்றாலை மின்சாரம் தொழிற்கூடம் அமைக்கும் போது, அதில் கிடைக்கும் மின்சாரத்தை வாரியத்திற்கு விற்று பணம் பெற்று, அதை வங்கிக்கடனுக்கு கட்டி கழித்துவிடலாம் என அதன் உரிமையாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால்  வாரியம் தற்போது தான் வாங்கும் மின்சாரத்திற்கான கட்டணத்தை கொடுக்க காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் காற்றாலை உற்பத்தியாளர்கள் வங்கிக்கு கடனை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருசில  காற்றாலை உரிமையாளர்கள் வங்கிக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தியும், வாரியம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து  காற்றாலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:எங்களிடமிருந்து பெறும் மின்சாரத்திற்கான விலையை, வாரியம் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக சரியாக தரவில்லை. தற்போதைய நிலவரப்படி, ரூ.1,000 கோடி அளவுக்கு பாக்கி  இருக்கிறது. நாங்கள் வங்கியில் கடன் பெற்று, காற்றாலையை அமைத்திருக்கிறோம். தற்போது வாரியம் காலம் தாழ்த்தி வருவதால், அதை கட்ட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.அதன்படி நாங்கள் தயாரிக்கும்  மின்சாரத்தை, வாரியத்திடம் மட்டுமே வழங்க முடியும். வெளியில் தனியாரிடம் விற்க இயலாது. எனவே எங்களது பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வாரியத்திடம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம்.  ஆனால் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களின் நிலை கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: