விளையாட்டு திடலை பிரிக்க வீரர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு: ஓட்டேரியில் சாலைமறியல்

 

பெரம்பூர், ஜூலை 20: பொது விளையாட்டு திடலை மூன்றாக பிரித்து பூங்கா அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஓட்டேரியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திரு.வி.க. நகர் மண்டலம், மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர் பகுதியில் மாநகராட்சி விளையாட்டு திடல் உள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட், கால்பந்து உள்பட பல்வேறு வகையான விளையாட்டுகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

இதனிடையே, இந்த விளையாட்டு திடல் மூன்றாக பிரிக்கப்பட்டு, கால்பந்து, டென்னிஸ் விளையாட்டு பகுதிகள் மற்றும் பூங்கா உள்ளிட்டவை அமைக்க டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி வாலிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு திடலில் நடந்து வரும் பணிகளை நிறுத்த வேண்டும் எனவும், கிரிக்கெட், கால்பந்து, கபடி உள்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் விளையாடும் பொது திடலாக மாற்றம் செய்ய வேண்டும் எனவும், திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ஆனால், பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், ஆத்திரமடைந்த வாலிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், தங்களது பெற்றோருடன் ஓட்டேரி – ஜமாலியா சந்திப்பில், நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். மண்டல அதிகாரிகள், ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

 

Related Stories: