வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள், கணினி எரிந்து நாசம்

 

பூந்தமல்லி, ஜூலை 18: பூந்தமல்லி அருகே வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் எரிந்து சேதமானது. பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஆவடி சாலையில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. பூந்தமல்லி மற்றும் சென்னீர்குப்பம், கரையான்சாவடி, வெற்றிலைத் தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த வங்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், வேலை நேரம் முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சென்று விட்டனர்.

தொடர்ந்து, நேற்று அதிகாலை வங்கியின் உள்ளே இருந்து தீடீரென புகை வந்துள்ளது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்குள் வங்கியில் இருந்து தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்கள், பீரோ, ரேக், பர்னிச்சர் பொருட்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமானது.

மேலும், இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ பரவுவதற்கு முன்பாகவே தீ அணைக்கப்பட்டதால் பணம், நகைகள் தப்பின. வங்கியின் உள்பகுதியில் ஒரு பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வங்கியில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Stories: