ஹர்திக், ராகுல் தடை நீக்கம் பிசிசிஐ நடவடிக்கை

மும்பை: பெண்கள் குறித்து தவறாக விமர்சனம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் மீதான தடையை பிசிசிஐ நீக்கியது. வட இந்திய தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பெண்கள் குறித்து இருவரும் தெரிவித்த கொச்சையான கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. அதனால் அதிர்ச்சிக்குள்ளான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.  இருவரும் கிரிக்கெட் வாரியத்துக்கு விளக்கம் அனுப்பியதுடன் மன்னிப்பும் கேட்டனர்.  இருவரின் பேச்சும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல தரப்பாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் இருவரும் அடுத்த போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அதனால் ஆஸ்திரேலியாவில் இருந்த இருவரும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. எனவே இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் போட்டியில்  இருவரும் பங்கேற்க முடியவில்லை. இவர்களுக்கு பதிலாக  மயங்க் அகர்வால், விஜய் சங்கர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் கேப்டன் வீராத் கோஹ்லிக்கு நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் அணியில் சேரும் புதிய வீரர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஹர்திக், ராகுல் மீதான தடையை விலக்கிக் கொள்வதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதனால் அவர்கள் மீண்டும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாண்ட்யா விரைவில் நியூசிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ராகுல் விரைவில் நடைபெற உள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய -ஏ அணியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக ரஞ்சி கோப்பை போட்டியிலும் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: