மீண்டும், மீண்டும் தண்ணீர் திறந்ததால் சரிந்து வரும் வைகை அணை நீர்மட்டம் : பொதுமக்கள் கவலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து முறை பாசானத்திற்காக பொதுப்பணித்துறையினர் மீண்டும் தண்ணீர் திறந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு தென்மேற்கு பருவமழையினால் நீர்வரத்து அதிகம் ஏற்பட்டதால் நீர்மட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி 69 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து வினாடிக்கு 3,333 கனஅடி உபரி நீர் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் திறக்கப்பட்டது. மேலும்  உசிலம்பட்டி தாலுகா விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஆகஸ்ட் 22ம் தேதி 58 கிராம பாசன கால்வாயில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையாலும், கஜா புயலாலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியில் மீண்டும் அணை 69 அடியை கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி இரண்டாவது முறையாக எட்டியது. இதனையடுத்து டிச. 15ம் தேதி தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆக 3 மாவட்டங்களுக்கு குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் கூடுதலாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீரும், பெரியார் கால்வாயில் 1680 கன அடி தண்ணீரும் வினாடிக்கு அரசு அறிவித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு அறிவித்த தேதிகளில் வைகை அணையிலிருந்து மீண்டும், மீண்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தனர். இதனால் அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதியன்று காலை மீண்டும் முறை பாசனத்திற்காக 800 கனஅடி நீர் கால்வாயிலும் மதுரை மாநகராட்சி ஆண்டிபட்டிசேடப்பட்டி கூட்டு குடிநீருக்காக 60 கனஅடி நீர் ஆக மொத்தம் 860 கனஅடி நீர் வினாடிக்கு பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டனர்.மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் வைகை அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு வினாடிக்கு 87கனஅடி நீர் வந்தடைகிறது. இதனால் நேற்றைய காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 55.03அடியாக இருந்தது. வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து மளமளவென சரிந்து வருவதையொட்டி கோடை காலத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு விடுமோ என்று பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: