குமரி மாவட்ட டாஸ்மாக் பார்களில் தின்பண்டங்களின் விலை கடும் உயர்வு: ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.45

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தின்பண்டங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தண்ணீர் பாட்டில் விலைகள் இரு மடங்காகி உள்ளன.குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் ரூ.2.50 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. விஷேச நாட்கள், விடுமுறை நாட்களில் இந்த விற்பனை ரூ.3 கோடியை தாண்டும். இந்த நிலையில் கடந்த 1ம் தேதியில் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக்  பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்படுத்த கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதையடுத்து டாஸ்மாக் பார்களில் தற்போத கண்ணாடி டம்ளர் கொடுக்கப்படுகிறது. தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. ரூ.7 ஆக இருந்த தண்ணீர் பாக்கெட் தற்போது பாட்டிலுக்கு மாறியதால் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 300 எம்.எல். தண்ணீர் பாட்டில், ரூ.17 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. 500 எம்.எல். குளிர்பான பாட்டில் ரூ.65, ரூ.55 என்ற விலையில் விற்பனையாகின்றன. 300 எம்.எல். சோடா ரூ.20 ஆக உள்ளது.

இதே போல் பார்களில் தின்பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. சுண்டல் ஒரு பிளேட் ரூ.25 ஆகவும், நிலக்கடலை ஒரு பிளேட் ரூ.30 ஆகவும் விற்பனையாகின்றன. புரூட்ஸ் சல்லாட்  ஒரு பிளேட் ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக காடை சில்லி ஒரு பிளேட் ரூ.120 ஆக உயர்த்தி உள்ளனர். கொய்யா, ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, அண்ணாச்சி பழம் ஆகியவை ஒரு பிளேட் தலா ரூ.30 ஆக உயர்ந்துள்ளன. இவற்றின் விலை ரூ.20 ஆக இருந்தது. பிளாஸ்டிக் தடைக்கு பின், ரூ.10 உயர்த்தி உள்ளனர். ரூ.25, ரூ.30 ஆக இருந்த டபுள் ஆம்ளேட் ரூ..45 ஆக உயர்ந்துள்ளது. சிங்கிள் ஆம்ளேட் ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பீப், குடல், பீப் சில்லி, முட்டை சில்லி , முட்டை பக்கோடா, மசால் சுண்டல், மசால் கிழங்கு, பீப் கிழங்கு, வறுவல் உள்ளிட்டவற்றின் விலைகளும் ஏற்கனவே இருந்ததை விட ரூ.10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்து உள்ளனர்.

இந்த விலை உயர்வு காரணமாக தற்போது டாஸ்மாக் பார்களில் மது அருந்த செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் சரக்குகளின் அடிப்படையில் தான் அந்த கடையில் உள்ள பார்களுக்கான டெபாசிட் தொகையை டாஸ்மாக் நிர்வாகம் நிர்ணயம் செய்கிறது.ஆனால் மதுக்கடைகளில் மது வாங்கும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், பார்களுக்கு வராததால் வைப்பு தொகை மற்றும் வாடகை, சம்பளம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு விலையை உயர்த்தி உள்ளதாக, பார் உரிமையாளர்கள் சிலர் கூறி உள்ளனர். வெளியே ரூ.20 க்கு கிடைக்கும் தண்ணீர் பாட்டில் இங்கு ரூ.45 வரை விற்பனையாகிறது. இதன் மூலம் இரு மடங்கு அதிகமாக ஒரு தண்ணீர் பாட்டிலில் பார் உரிைமயாளர்கள் லாபம் பார்க்கிறார்கள். இப்படி விைல உயர்வால் பார்களுக்கு செல்வது இல்லை. மது விலையை விட, அதை குடிப்பதற்கு அதிகமாக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது என்று மது பிரியர்கள் வேதனையுடன் கூறி உள்ளனர். சில டாஸ்மாக் பார்களில் உணவுகள் சுத்தமான முறையில் தயாரிப்பதில்லை. இதை உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை என்றும் மது பிரியர்கள் கூறுகிறார்கள்.

சாலை ஓரங்களில் குடிமகன்கள் :

மதுக்கடை பார்களில் விலை உயர்வு காரணமாக மது வகைகளை வாங்குபவர்கள், சாலை ஓரங்கள், கால்வாய்கள், குளக்கரைகள், பாலங்களின் அடிப்பகுதிகள் மற்றும் ஒதுக்குபுறமான பகுதிகளில் நின்று கொண்டு மது அருந்துகிறார்கள். பகல் நேரங்களில் இவ்வாறு திறந்தவெளியில் நின்று மது அருந்துவதால், பெண்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பைக், கார்களை ஓரமாக நிறுத்தி விட்டும் சிலர் மது அருந்திய வண்ணம் உள்ளனர். இவ்வாறு மது அருந்துபவர்கள் போதையில் வாகனங்களை வேகமாக ஓட்டி செல்கிறார்கள். இதனால் விபத்துக்களும் அதிகமாக நடக்கின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

பெட்டிக் கடைகளில்...

பார்களில் விலை உயர்வு காரணமாக டாஸ்மாக் கடைகள் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் வியாபாரம் களை கட்டி உள்ளது. பேப்பர் கப், ஒரு தண்ணீர் பாக்கெட், ரூ.5க்கு வேர்க்கடலை, சிப்ஸ், காரச்சேவு பாக்கெட்டுகள் கிடைப்பதால், பெட்டி கடைகளில் இதை வாங்க மாலை முதல் இரவு வரை கூட்டம் அதிகமாக இருக்கிறது. சில கடைகளில் இன்னும் ரகசியமாக பேப்பர் கப் விற்பனை நடக்கிறது. அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: