இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 9 விசைப்படகுகள் ராமேஸ்வரம் வந்தன

ராமேஸ்வரம்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 9 விசைப்படகுகள் நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தடைந்தன.இலங்கை கடற்படையால் 2016 முதல் 2018 வரை கைப்பற்றப்பட்ட, தமிழக மீனவர்களின் 167 விசைப்படகுகள் கடந்தாண்டு விடுவிக்கப்பட்டன. இலங்கை காங்கேசன்துறை, கிராஞ்சி,  தலைமன்னார், ஊர்க்காவல்துறை கடற்படை முகாம் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இப்படகுகளில் 47 படகுகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன. மற்ற படகுகள்  சேதமடைந்து கடலில் மூழ்கிய நிலையில் இருக்கிறது.இதில் 9 படகுளை மீட்க கடந்த 17ம் தேதி ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து 9 படகுகளில் மீனவர்கள், மெக்கானிக்குகள் உட்பட 72 பேர் குழு இலங்கை சென்றது. தமிழக மீன்வளத்துறை  கூடுதல் இயக்குனர் ஜான் வர்க்கீஸ் தலைமையில் அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினரும் மதுரையில் இருந்து விமானத்தில் இலங்கை சென்றனர்.

3 நாட்கள் இலங்கை காரை நகர் துறைமுகத்தில் தங்கி, நல்ல நிலையிலிருந்த 9 விசைப்படகுகளை சீரமைத்து நேற்று ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டனர். மாலை 5.30 மணிக்கும் மேல் ஒவ்வொரு  படகாக ராமேஸ்வரம் துறைமுகம் வந்தடைந்தது.இதனிடையே புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் குழு தங்களது 5 படகுகளை மீட்க இலங்கை புறப்பட்டு சென்றனர். இவர்கள் வரும் 24ம் தேதி தமிழகம் திரும்புவார்கள் என்று  கூறப்படுகிறது.மீண்டும் தாக்குதல் 5 மீனவர்களுக்கு சிகிச்சை ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதில் பாம்பனைச் சேர்ந்த  ரியான் உள்பட 5  மீனவர்களுக்கு தொடை மற்றும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இவர்கள் இரவிலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகுகள்  சேதமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மீன்வளத் துறை மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: