இன்று இரவு திருக்கல்யாணம் பழநி கோயிலில் நாளை தைப்பூச தேரோட்டம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

பழநி: பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளது. இன்றிரவு நடைபெற உள்ள திருக்கல்யாணம் மற்றும் நாளை நடைபெறவுள்ள தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். பழநி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் நடைபெறும் திருவிழாவில் தினமும் வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்றிரவு 7.45 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் வள்ளி-தெய்வானை-சமேதரராக முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

இரவு 9.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்து வருகின்றனர். பாதயாத்திரை பக்தர்களும் வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச திருவிழாவின் காரணமாக நேற்று முதல் 23ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 24ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும். தைப்பூசத்தை முன்னிட்டு நாளை திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (21ம் தேதி) தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்தையொட்டி நாளை (21ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகளும், 8 மணிக்கு மேல் அஸ்திரதேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடக்கிறது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, பின்னர் சுவாமி, அம்பாள் சப்பரங்களில் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து கோயிலை அடைவர். நிகழ்ச்சியில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: