தங்க கடத்தலின் தலைநகரானது சென்னை

உலகின் பல நாடுகளில் உள்ளவர்கள் வீடு, சொத்து வாங்குவது, பங்கு சந்தையில் முதலீடு செய்வதுபோல தங்கம் வாங்குவதையும் ஒரு முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படியில்லை, முதலீடு மட்டுமின்றி கலாச்சாரத்தில் ஒன்றாக பார்க்கப்படும் ஆபரணமாகவும் தங்கம் முக்கிய பங்காற்றுகிறது. உலக அளவில் தங்க நகைகள், தங்க கட்டிகள் என அனைத்து விதத்திலும் அதிக அளவில் தங்கம் வாங்கும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியிலில் இந்தியா இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. ஆனால் உலகில் அதிக அளவில் தங்க நகைகளை வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கேரளா, தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகளவில் தங்கம் ஆபரணங்களாக வாங்கப்படுகிறது. மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் ஒரு திருமணம் என்பது தங்கத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.  

திருமணங்களில் தங்கத்தின் பங்கு அதிகம் உள்ளது. அன்பளிப்பு முதல், யாரேனும் ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால், தங்கம் தான் அதிகமாக வழங்கப்படுகிறது, பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், ஒருவருக்கு அதை பரிசளிப்பதையே நம் மக்கள் பெருமையாக எண்ணுகின்றனர்.

மேலும் பெரும்பாலான மனைவிகள், கணவரை விட தங்கங்களின் மீதே அதிகம் காதல் கொள்வார்கள். தங்கத்தால் ஏற்பட்ட சண்டைகளையும் நாம் அதிகம் பார்த்ததுண்டு, கேட்டதுண்டு. இப்படி அனைவராலும் காதலித்து அணிந்து கொள்ளப்படும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படி பார்க்கையில் தற்போது ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 90, 100... என ஏறிக்கொண்டே செல்கிறது.

இப்படி விலை உச்சத்தை எட்டி வரும் கிலோ தங்கத்தின் விலை மற்ற நாடுகளிடம் ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவில் 4 லட்சம் அதிகம். அப்படி இருக்கும் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கடத்துவதில் இந்தியா முதல் இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறது. ஏன் தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படுகிறது என்றால், இங்கு தங்கம் இறக்குமதிக்கு 10 சதவீதம் வரியும், 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி என மொத்தம் 13 சதவீதம் வரி விதிக்கப்படுவதே காரணம். வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்தால் 4 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சார்ஜா, குவைத் போன்ற நாடுகளில் இருந்து கிலோ கணக்கிலான தங்கங்கள் வாங்கப்பட்டு, அந்த தங்கங்கள் விமானங்கள் மற்றும் கடல் வழியே இந்தியாவிற்கு கடத்தி வரப்படுகிறது. நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு வழியாக இந்த தங்கம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்தத்தில் சென்னை தங்கம் கடத்தலின் மையமாக விளங்குகிறது.

சுங்க அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் என பலரை தாண்டி எப்படி தங்கம் கடத்தி வரப்படுகிறது என்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தால் 60 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருவிகள் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றனர். குருவிகள் கடத்தலில் ஈடுபடுவதற்கு முன்பு பல்வேறு சோதனைகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். முக்கியமாக குருவிகளின் குடும்ப சூழ்நிலை, பண தேவை என எல்லாவற்றையும் அறிந்த பிறகும், அவர்களின் கல்வி சான்றிதழ், சொத்து ஆவணங்கள் என எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. ஒரு குருவி வெளிநாட்டிற்கு சென்று தங்கத்தை கடத்தி வரும் வரை அவருக்கான செலவுகளை கடத்தல் கூட்டத்தின் தலைவனே பார்த்துக்கொள்வான்.

இப்படி இருக்கும் குருவிகள் தங்கம் கடத்த பயன்படுத்தும் முறைகள் பலவிதமானவை. ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தி வருவது, தங்கத்தை உருக்கி உருளையாக்கி தொண்டை வழியே விழுங்கி வயிற்றில் மறைத்து எடுத்து வருவது (இங்கு வந்த பின்னர் இனிமா கொடுத்து எடுக்கப்படும்), உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வருவது, ஊனமுற்றவர்களின் சக்கர நாற்காலியில் எடுத்து வருவது, வயதானவரின் வாக்கிங் ஸ்டிக்கிற்குள் மறைத்து வைப்பது, தங்கத்தை வேறு உலோகங்களுடன் கலந்து எடுத்து வருவது, சென்ட் பாட்டில்களின் உள்ளே வைத்து எடுத்து வருவது, செல்போன் பேட்டரியை கழற்றிவிட்டு அதில் தங்கக் கட்டியை வைப்பது, ரேடியோ, டி.வி, ஸ்பீக்கர், போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் வைத்து எடுத்துவருவது, சிகரெட், வாட்ச், வாட்டர் பாட்டில், கட்டிங் பிளேயர், உணவு பொருட்கள், சூட்கேஸின் கைப்பிடிக்குள் வைத்து எடுத்து வருவது என தினமும் அதிகாரிகளே வியப்படையும் வகையில் புதுப்புது முறைகளில் கடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுக்கு முன்பு துபாயில் இருந்து வந்த ஒருவர் பேரிச்சம் பழங்களின் கொட்டைகளை அகற்றிவிட்டு, அதே வடிவில் தங்கக் கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக பழத்துக்குள் வைத்து கடத்தி வந்து சிக்கிக் கொண்டார்.  இப்படி விமானங்களின் மூலம் கடத்தி வருபவர்களை தகவலின் அடிப்படையிலோ, சந்தேகத்தின் அடிப்படையிலையோ கொண்டு வருபவர்களை அதிகாரிகள் கைது செய்து சோதனை செய்வார்கள். மேலும் கடத்தலில் ஈடுபடுபவர்களை அதிகாரிகள் சுலபமாகவும் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் எல்லோரையும் கைது செய்வதில்லையாம். கணக்கிற்காக சிலரை மட்டுமே கைது செய்வதாகவும் கூறப்படுகிறது. கடத்தலுக்கு முக்கிய காரணமே அதிகாரிகள் தான் என்ற தகவலும் வெளிவருகிறது. பொதுவாக, விமான நிலையங்களில் சோதனையின்போது கிராம் கணக்கில் தங்கம் சிக்கியதாகத்தான் தினசரி நாம் கேள்விப்படுகிறோம்.

அது ஏன் என்றால், ஒருவர் 20 லட்சத்துக்கு தங்கத்தை கடத்தி வந்து, அதிகாரிகளிடம் சிக்கினால் அவர்களிடம் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார்கள். இதற்கு சட்டத்திலும் இடம் உண்டு. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 6 கிலோ தங்கத்தை குருவிகள் கடத்தி வர வேண்டும் என்றால் 10 குருவிகள் ஒருவருக்கு 600 கிராம் என 6 கிலோவை கடத்தி வருவார்கள், அப்படி அதில் யாரேனும் சிக்கினால் பெரியதாக தண்டனை கிடைக்காது, குறைந்த அபராதத்துடன் முடிந்து விடும். பெரும்பாலும் தங்க கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் துணைபோவதாகவும், சும்மா கணக்கு காட்டுவதற்காக தான் கிராம் கணக்கில் கடத்தி வரும் சில குருவிகளை பிடிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

தற்போது பெண் கடத்தல்காரர்கள் அதிகரித்துவிட்டதாகவும், பெண்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் முறைகள் அதிகாரிகளை கடும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவதாகவும், கைக்குழந்தைகளை பயன்படுத்தியும், உள்ளாடைகள், உடலின் பல பகுதிகளில் வைத்து கடத்தி வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் பெண் சுங்க அதிகாரிகள் குறைவாக இருப்பதால், சந்தேகிக்கப்படும் பெண்களை சோதனை செய்வதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. ஆயிரம் கடத்தல்க்காரர்கள் தப்பினாலும், ஒரு நேர்மையான பயணிகளும் தண்டிக்கப்பட்டு விட கூடாது என்பதில் சுங்க அதிகாரிகள் கவனமாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டு மட்டும் சென்னை விமான நிலையத்தில் 120 கோடி மதிப்பிலான 360 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதாகவும், அதனை கடத்தி வந்ததாக 260க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 சதவீதம் பேர் பெண்கள் என்றும் சுங்கவரித்துறையின் கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கணக்கில் காட்டப்படாமலும், அதிகாரிகளிடம் சிக்காமலும், அதிகாரிகளின் உதவிவுடன் தப்பியவர்கள் என சென்னை விமான நிலையத்தில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் 700 கிலோவிற்கு மேல் தங்கம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மட்டும் சென்னை விமான நிலையத்தில் 25 பேர் கடத்திலில் ஈடுபட்டதாக கைது செய்யப்படுகின்றனர். ஆனால் தினமும் கடத்தில் 5 நபராவது சென்னை விமான நிலையத்தின், அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் தப்பித்து பல கிலோ தங்கத்துடன் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இப்படி பல்வேறு சோதனைகளை தாண்டி கடத்தி வரப்படும் தங்கங்கள், கடத்தல் கும்பலின் தலைவனிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு, அவன் அதை சில நாட்கள் பாதுகாத்து வைத்து, அதிகாரிகளின் நடமாட்டங்கள் அடங்கிய பின்பு சரியான நகை கடைகளில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து விடுவார்கள். பெரும்பாலான கடத்தல் தங்கம் கேரளாவில் தான் விற்கப்படுகிறது. அங்கு தான் கடத்தல் தங்கத்திற்கு அதிக மவுசும் உள்ளதாம். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடத்தல் தங்கம் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.

தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து கடத்தப்பட்டதாக கடந்த வாரம் 7 கோடி மதிப்பிலான தங்கம், ஓட்டலில் பெண்கள் வைத்து வியாபாரம் செய்தபோது 11 கோடி பணம், 7 கிலோ தங்கம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தேடி வந்து பிடிக்கும் தங்கங்கள், சுங்க அதிகாரிகள் உதவியுடன் கடத்தப்பட்ட தங்கங்களா என்றும் சந்தேகம் எழுப்புகிறது. விமானத்தை விட தற்போது கடல் மார்க்கமாக தங்க கடத்தல் அதிகரித்துள்ளது. பெரிதும் கண்காணிப்பு இல்லாததால், கை மாற்றுவதற்கு கடத்தல் காரர்களுக்கு எளிதாக இருப்பதாகவும், விமான கடத்தலில் அதிக கவனம் செலுத்தும் அதிகாரிகள், கடல் வழி கடத்திலில் கோட்டை விடுவதாகவும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ  தங்கத்தின் விலை

ஒரு கிலோ தங்கம் 33 லட்சம். வெளிநாடுகளுக்கும், இந்தியாவிற்கும் ₹4 லட்சம் வித்தியாசம்.

ஒரு நாளைக்கு

700 கிலோ தங்கம் கடத்தல்

இந்தியா முழுவதும் பல்வேறு விமான நிலையங்கள், ரயில், கடல், சாலை என பல வழியாக ஒரு நாளைக்கு 700 கிலோ தங்கம் கடத்தப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

பெண்களுக்கு மவுசு

குருவிகள் என்றால் பெரும்பாலும் ஆண்கள் தான் என்று கேள்விபட்டிருப்போம், ஒரு சிலரை பார்த்திருப்போம். ஆனால் சில ஆண்டுகளாக பெண் கடத்தல் காரர்கள் தங்கம் கடத்தலில் கலக்கி வருகிறார்கள். பெண்கள் பல்வேறு முறைகளை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபடுவதாலும், சந்தேகிக்க முடியாத அளவுக்கு குடும்ப பெண்கள் மாதிரி கைக்குழந்தைகளுடன் வந்து பல கிலோக்களை கில்லி மாதிரி கடத்தி வருவதால் அவர்கள் மவுசு கூடியுள்ளது.

சென்னையில் 2018-ல் 120 கோடி தங்கம் கடத்தல்

சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு மட்டும் ₹120 கோடி மதிப்பிலான 360 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. கணக்கில் வராமல் வியாபாரத்திற்கு சென்றது 700 கிலோவை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.

கிராமில் கடத்துவது ஏன்?

பெரும்பாலான கடத்தல் தங்கங்கள் சில கிராம் கணக்கிலே வெளியே காட்டப்படுகிறது. அது ஏன் என்றால், இந்தியாவில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டால் உடனே ஜாமீனில் வரக் கூடிய பிரிவில்தான் வழக்குப்பதிவு செய்யப்படும். ஒரு கோடியை தாண்டினால்தான் ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும். எனவே தான் கடத்தல் காரர்கள் உஷாராக கிராமில் கடத்தி தப்பித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: