அதிகாலையில் வீடு புகுந்து, கத்தி முனையில் மிரட்டி வயதான தம்பதியிடம் 10 சவரன் பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலை

சென்னை: கொளத்தூர் அஞ்சுகம் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (72). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி வசந்தா (60). நேற்று அதிகாலை இவர்கள் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், கத்தி முனையில் வசந்தா கழுத்தில் கிடந்த 10 சவரன்  செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.

* வில்லிவாக்கம் பகுதி கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டிய புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவுடி ஜூங்கிலி கணேசன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* புதுபெருங்களத்தூரில் ஜெபசிங் என்பவரின் ஐஸ்கிரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய புதுபெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசுந்தர் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* அடையாறு இந்திரா நகர் 2வது அவென்யூவை சேர்ந்தவர் நவநீத் (30). அடையாறு 3வது மெயின் ரோட்டை சேர்ந்த சுலோக் பிரபு (24) ஆகியோரிடம் செல்போன் பறித்த சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு (59), வண்ணாரப்பேட்ைடயை சேர்ந்த பிரசாந்த் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* ஆதம்பாக்கம் நியூ காலனி ஏரிக்கரை சாலையை சேர்ந்த டாஸ்மாக் கடை மேலாளர் கார்த்திக் (28) என்பவர், கூடுதல் விலைக்கு மது விற்றதாக கூறி, அவரது பைக்கை தீவைத்து எரித்த ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரை சேர்ந்த ராம் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* நேபாளத்தை  சேர்ந்த பர்வீன் பன்சால் (35), வேளச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில்  பணியாற்றி வந்த இவர், புழல் லட்சுமிபுரம்  செம்பியம்-செங்குன்றம் நெடுஞ்சாலை அருகில் காலி மைதானத்தில் சடலமாக கிடந்தார். கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.

* பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ஜில்தாஸ்பேகம் (60) மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே சாலையை கடந்தபோது, மாநகர பஸ் மோதி இறந்தார்.  

* தண்டையார்பேட்டை அஜீஸ் நகரில், வீட்டின் முன்பு அமர்ந்து மது அருந்தியதை தட்டிக்கேட்ட 2 பெண்கள் உள்பட மூவரை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளையனை மடக்கிய போக்குவரத்து போலீசார்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகமது காசிம் (28), சென்னை அண்ணா சாலை, அம்ருன்னிஷா பேகம் தெருவில் தங்கி, தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், அண்ணா சாலையில் நடந்து சென்றபோது, இவரது செல்போனை மர்ம நபர் பறித்து சென்றார். அப்போது, அங்கிருந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலர் கர்ணன், அந்த நபரை மடக்கி பிடித்தார். விசாரணையில், தேனாம்பேட்டை, எஸ்.எம் நகர், ஐ பிளாக் பகுதியை சேர்ந்த மருதுபாண்டி (23) என்பதும், அவர் மீது ராயப்பேட்டை, அண்ணா சாலை காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு இருப்பதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (58), தொழிலதிபர். இவர், நேற்று முன்தினம் மாலை, தனது குடும்பத்தினர் 8 பேருடன், வாடகை காரில் திருப்பதி புறப்பட்டார். பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே சென்றபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால், காரை நிறுத்திவிட்டு சிதம்பரம் குடும்பத்தினர் அவசர அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் காரின் முன் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: