பகலில் காவலன்... இரவில் கள்ளன்... கோவில்பட்டி 'கொள்ளைக்கார'போலீஸ் சிக்கியது எப்படி?

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பெண்களிடம் கைவரிசை காட்டிய போலீஸ்காரருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. அவர் பிடிபட்டது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலைபார்த்து வந்த போஸ் மகன் காவேரி மணியன்(37) என்பவர் திருட்டு தொழிலில் ஈடுபட்டதால் அவருக்கு நேற்று கோவில்பட்டி கோர்ட் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்தது. இதைத்தொடர்ந்து அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காவேரி மணியன் கொள்ளையில் ஈடுபட்டது எப்படி, சிக்கியது எப்படி? என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது வருமாறு: காவேரிமணியனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள சுந்தரராஜபுரம். இவர் சென்னையில் போலீஸ் வேலைக்கு பயிற்சி எடுத்த பின் 2003ம் ஆண்டு தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸ்காரராக சேர்ந்தார். அதன்பிறகு 2 ஆண்டுகள் கழித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அந்த நேரத்தில் அவருக்கு திருமணம் நடந்தது. மனைவி ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். தற்போது 11 வயதில் மகன் உள்ளார். அப்போது இவர்கள் இனாம்மணியாச்சியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் காவேரிமணியனுக்கு திருட்டு புத்தி ஏற்பட்டுள்ளது. குறைந்த சம்பளத்தை வைத்து என்ன செய்வது, நகை திருட்டில் ஈடுபட்டால் லம்பா பெரிய தொகை பார்க்கலாம் என்ற பேராசையால் துணிந்து திருட்டு தொழிலில் இறங்கியிருக்கிறார். பகலில் நல்ல பிள்ளைபோல் போலீஸ் நிலையத்தில் வேலைபார்த்து வந்த இவர் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். முதன் முதலில் நாலாட்டின்புத்தூர் பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற 2 பெண்களின் முகத்தில் மிளகாய்பொடி தூவி 10 பவுன் பறித்துள்ளார். அதன்பிறகு கோவில்பட்டி சுபா நகரில் ஸ்கூட்டியில் சென்ற கல்லூரி மாணவியை வழிமறித்து அவர் முகத்தில் மிளகாய்பொடி தூவி 5 பவுன் பறிப்பு. இதுபோல் காந்திநகரில் மூதாட்டி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 10 பவுன் பறிப்பு. சாத்தூர் பைபாஸ் ரோட்டில் இருக்கன்குடி கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற 2 பெண்களிடம் கத்திமுனையில் 14 பவுன் பறிப்பு. ஜோதி நகரில் பெண்ணிடம் கத்திமுனையில் 5 பவுன் பறிப்பு. இப்படி 50 பவுனுக்கு மேல் கவேரிமணியன் நண்பர்களுடன் சேர்ந்து பறித்துள்ளார்.

கோவில்பட்டி பகுதியில் தொடர்ந்து வழிப்பறி நடந்ததால் பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அஞ்சினர். எஸ்பி உத்தரவின்பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நீண்ட நாட்கள் ஆகியும் அவர்களால் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் 29.1.2013 அன்று கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில்குமார் தனது மருமகள் செல்வி என்பவருடன் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிட பைக்கில் சென்றார். பைபாஸ்சில் சென்றபோது காவேரிமணியன் உள்பட 4 பேர் இவர்களை வழிமறித்தனர். கத்தியை காட்டி செல்வி அணிந்திருந்த நகையை கேட்டனர். அவர் மறுத்ததால் பறிக்க முயன்றனர். செந்தில்குமார் ராணுவ வீரர் என்பதால் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்றார். இதில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். காவேரி மணியன் மட்டும் வசமாக சிக்கிக்கொண்டார். இதில் இருந்து தப்பிக்க முடிவு செய்த காவேரிமணியன், சார் நான், மேற்கு காவல் நிலைய போலீஸ்காரன். கொள்ளையர்கள் உங்களை சுற்றி வளைத்ததை பார்த்துதான் நான் வந்தேன் என்று சீன் போட்டார். ஆனால் செந்தில்குமார் விடவில்லை. நீயும் அந்த கொள்ளைக்காரனுடன்தானே வந்தாய்... பிறகு எப்படி நீ போலீசாக இருக்கமுடியும் என்று சட்டையை பிடித்துக்கொண்டு அதட்டினார். உடனே மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததும், சார் இவர் உங்கள் ஸ்டேஷனில்தான் வேலை பார்க்கிறாரா? என செந்தில்குமார் கேட்கவே அப்போதுதான் காவேரிமணியன் உண்மையான போலீஸ்காரர் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவேரிமணியன் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்தவர்கள் பெயர் விவரத்தையும் தெரிவித்தார். அதன்படி ஓலைகுளம் வெங்கடேஷ்(32), கயத்தாறு கணேசன்(32), சுடலைமணி(36) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவில்பட்டி கோர்ட்டில் நடந்து வந்தது. கைதான 4 பேரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் காவேரிமணியன் தவிர அவரது 3 நண்பர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரரே இப்படி திருட்டில் ஈடுபட்டால் நாடு எப்படி உருப்படும்? என்று கோர்ட் வளாகத்தில் சிலரின் முணுமுணுப்பை கேட்க முடிந்தது.

ஒரு வழக்கில் மட்டும் தண்டனை

காவேரிமணியன் மீது ஏகப்பட்ட வழிப்பறி வழக்குகள் மட்டுமின்றி, பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் எந்த சாட்சியமும் இல்லாததால் அனைத்திலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவவீரர் செந்தில்குமார் மருமகளிடம் கைவரிசை காட்டியபோதுதான் அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதனால் அந்த வழக்கில் மட்டும் 5 ஆண்டு தண்டனை கிடைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: