ரூ.8 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் : வாலிபர் கைது

சென்னை,:  கொழும்பில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது (26) என்ற வாலிபர், சுற்றுலா பயணியாக இலங்கை சென்று திரும்பினார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது, எதுவும் இல்லை.

பின்னர் வாலிபரை, தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனை செய்தனர். அவரது ஆசனவாயில் ரப்பர் ஸ்பான்ச் வைத்திருந்தது தெரிந்தது. அதை எடுக்க முயன்றபோது, அதிகமாக உள்ளே திணித்து வைத்திருந்ததால் எடுக்க முடியவில்லை. மேலும், வாலிபரும் வலி தாங்க முடியாமல் கதறினார்.

இதையடுத்து, விமான நிலைய மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் மூலம் வெளியே எடுத்தனர். அதில் 235 கிராம் எடையுள்ள 2 தங்க துண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ₹8 லட்சம். தொடர்ந்து முகமதுவை, கைது செய்த அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

வேளச்சேரி: ஒட்டியம்பாக்கம்,  ஆவுடையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தர்ஷன் குமார்  (45). அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு கடைக்கு சென்றார். இரவு வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது. பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

கொடுங்கையூர்: கொடுங்கையூர், அஞ்சுகம் நகர், பொன்னன் தெருவை சேர்ந்தவர் வில்சன் (45). பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு எழுந்து வந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். அதற்குள் ஆட்டோ இன்ஜின் பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* சென்னை, நேப்பியர் பாலம் அருகே வசிப்பவர் சக்திவேல் (39). கொத்தனார். நண்பர்களை பார்க்க நேற்று நேப்பியர் பாலம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்தவர்கள் வற்புறுத்தி சக்திவேலை ஏற்றியுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் சக்திவேலிடம் பணம் கேட்டு அவர்கள் மிரட்டி சரமாரியாக தாக்கி,  ரூ.3600ஐ பறித்துக் கொண்டு கீழே தள்ளியுள்ளனர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  

அண்ணா சதுக்கம் போலீசார் சாலையில் அடிபட்டு கிடந்த சக்திவேலை மீட்டு கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

* அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம், பாரதிதாசன் நகர், மேட்டூர் இணைப்புச் சாலையில் வசித்தவர் பாலகுமார் (37). தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடக்க இருந்த இவரது திருமணம் திடீரென தடைபட்டது. இதனால், மனம் உடைந்து காணப்பட்ட பாலகுமார், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: