வல்லூர் அனல் மின்நிலைய சாம்பலை கொட்ட ஜகோர்ட் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : வல்லூர் அனல் மின்நிலையம் எண்ணூரில் சாம்பல் கொட்ட விதிக்கப்பட்ட தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அங்கு மின் உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. திருவள்ளூரில் உள்ள வள்ளூர் அனல் மின்நிலையமானது, தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டது. வள்ளூர் அனல் மின்நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 3 அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்து அந்த நிலக்கரியை கன்வேயர் பெல்ட் மூலம் அனல் மின்நிலையத்திற்கு கொண்டு வந்து எரியூட்டப்பட்டு 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வல்லூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 71 சதவிகிதம் தமிழகத்திறக்கும், மீதமுள்ளது ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் போது உருவாகும் சாம்பல் கழிவுகள் அனல் மின்நிலையத்திற்கு அருகிலேயே எண்ணூர் சதுப்பு நில பகுதியில் கொட்டப்படுகிறது. இந்த சாம்பல் கழிவு எண்ணூர் ஆற்றில் கலப்பதால் மீன்வளம், மண்வளம் பாதிக்கபடுவதாக அப்பகுதி பொதுமக்களும், மீனவர்களும் புகார் அளித்தனர். மேலும் எண்ணூர் சதுப்பு நிலத்தில் சாம்பல் கழிவு கொட்டப்படுவதற்கு எதிராக மீனவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வல்லூர் அனல் மின்நிலையத்தின் சாம்பல் கழிவுகளை எண்ணூரில் கொட்ட தடை விதித்து உத்தரவிட்டது.

மின்சாரம் தயாரிக்கும் போது வரும் சாம்பல் கழிவுகளை வெளியேற்ற முடியாததால் அனல் மின்நிலையத்தில் கடந்த 5 தினங்களாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து வல்லூர் அனல் மின்நிலையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தல் அனைத்தும் கடைபிடிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சாம்பலை கொட்ட உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரியை துகளாக்குதல் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. சுமார் 8 மணி நேரம் நடைபெறும் முதற்பட்ட பணிகளுக்கு பிறகு மின் உற்பத்தி நடைபெறும் என்று வல்லூர் அனல் மின்நிலைய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: