90 கிமீ வேகத்தில் காற்று வீசும் அந்தமானில் இன்று காலை கரை கடக்கிறது `பபுக்’ புயல் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘பபுக்’ புயல், அந்தமானில் இன்று கரையை கடக்கும்’ என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் `பபுக்’  என்ற புயல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘பபுக்’ புயல் தற்போது வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய எல்லையை அடைந்துள்ளது. அந்தமானுக்கு தென்கிழக்கே 720 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், அந்தமானை நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் இந்த புயல், இன்று அதிகாலை அந்தமான் தீவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 70 கிமீ முதல் 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும்.  பின்னர், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மரை நோக்கி செல்கிறது.

அங்கு நாளை அல்லது 8ம் தேதி புயல் வலுவிலக்கக் கூடும். புயல் காரணமாக அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும். அந்தமான் தீவு பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், வங்கக்கடல் பகுதிகளில 8ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டை மிரட்டிக் கொண்டிருந்தது. இது, அங்கு கரை கடக்கும் என கருதப்பட்டதால், கடலோர பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இந்த புயலால் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் நேற்று அங்கு 3 பேர் பலியாகினர்,

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: