கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், 660 ரன் இமாலய இலக்கை துரத்தும் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்துள்ளது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இபோட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச, நியூசிலாந்து 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, டிரென்ட் போல்ட் வேகத்தை சமாளிக்க முடியாமல் 104 ரன்னுக்கு சுருண்டது. கடைசி 4 வீரர்கள் தொடர்ச்சியாக டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. நியூசி. பந்துவீச்சில் போல்ட் 6 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, 74 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ராவல் 74, லாதம் 176 ரன், நிகோல்ஸ் 162* ரன், கிராண்ட்ஹோம் 71* ரன் விளாசினர். இதையடுத்து, 660 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்திருந்தது.