நேரடியாக பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் சன்ரைசர்ஸ் – நைட் ரைடர்ஸ் மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடர் 17வது சீசன் பிளே ஆப் சுற்றின் குவாலிஃபயர் 1 ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. கடைசி நாள் வரை ‘சஸ்பென்ஸ்’ வைத்த இந்த சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஆர்சிபி, நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் மொத்த ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி முன்னேறியது.

அந்த அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இம்முறை 10 தோல்விகளுடன் பரிதாபமாகக் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. பஞ்சாப், குஜராத் அணிகளும் ஏமாற்றத்துடன் வெளியேறின. இந்த நிலையில், முதல் 2 இடங்களைப் பிடித்த கொல்கத்தா – ஐதராபாத் அணிகள், அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் குவாலிஃபயர் 1 ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக சென்னையில் மே 26ம் தேதி நடக்க உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி, ராஜஸ்தான் – பெங்களூரு அணிகளிடையே அகமதாபாத்தில் நாளை நடக்கும் எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் (சென்னை) பைனல் வாய்ப்புக்காக மீண்டும் மோத வேண்டும்.

லீக் சுற்றில் முதல் முறையாக முதலிடம் பிடித்து அசத்தியுள்ள கேகேஆர் அதே உற்சாகத்துடன் நேரடியாக பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் ஃபில் சால்ட் நாடு திரும்பியிருப்பது கொல்கத்தா அணிக்கு சற்று பின்னடைவு தான் என்றாலும்… சுனில் நரைன், வெங்கடேஷ், கேப்டன் ஷ்ரேயாஸ், ரஸ்ஸல், ரிங்கு, ஸ்டார்க், வருண் ஆகியோர் அந்த அணியின் துருப்புச் சீட்டுகளாக நீடிக்கின்றனர்.
அதே சமயம், கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நடப்பு சீசனில் பல வரலாற்று சாதனைகளை படைத்திருப்பதுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்து கம்பீரமாக குவாலிஃபயர் 1ல் களமிறங்குகிறது.

பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் ஆட்டத்தில் கடினமான இலக்கை (215) துரத்தி வென்றதும் சன்ரைசர்சுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ஹெட், அபிஷேக்… அவர்களைத் தொடர்ந்து திரிபாதி, ரெட்டி, கிளாஸன், ரஸ்ஸல், ஷாபாஸ், சமத் என அதிரடி வீரர்கள் அணிவகுப்பது ஐதராபாத் அணியின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறது. புவி, கம்மின்ஸ், நடராஜன், வியாஸ்காந்த், ஷாபாஸ் பந்துவீச்சும் நைட் ரைடர்சுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. இரு அணிகளுமே நேரடியாக பைனலுக்கு முன்னேறும் உறுதியுடன் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இன்று குவாலிஃபயர் 1 அமர்க்களம்
* இரு அணிகளும் 26 முறை மோதியதில் கொல்கத்தா 17-9 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* கடைசி 5 ஆட்டங்களில் கொல்கத்தா 3-2 என முன்னிலை வகிக்கிறது.
* நடப்புத் தொடரில் மார்ச் 23ல் ஈடன் கார்டனில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நூலிழையில் வென்றது (4 ரன்). கொல்கத்தா 20 ஓவரில் 208/7; ஐதராபாத் 20 ஓவரில் 204/7.
* அதிகபட்சமாக ஐதராபாத் 228, கொல்கத்தா 208 ரன், குறைந்தபட்சமாக ஐதராபாத் 115, கொல்கத்தா 101 ரன் எடுத்துள்ளன.
* இரு அணிகளுமே 9வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

சிக்சரில் முதல்வன்!
லீக் சுற்றின் முடிவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் ஷர்மா முதலிடம் வகிக்கிறார் (41 சிக்சர்). ஆர்சிபி அணியின் விராத் கோஹ்லி (37), லக்னோ வீரர் நிகோலஸ் பூரன் (36), சன்ரைசர்சின் கிளாஸன் (33), கேகேஆர் அணியின் சுனில் நரைன் (32 சிக்சர்) டாப் 5ல் உள்ளனர்.
* அதிக ரன் குவிப்புக்கான ஆரஞ்சு தொப்பி ஆர்சிபி வீரர் கோஹ்லி வசம் உள்ளது. அவர் 14 போட்டியில் 708 ரன் (அதிகம் 113*, சராசரி 64.36, சதம் 1, அரை சதம் 5) விளாசி முதலிடம் வகிக்கிறார். ருதுராஜ் (583, சென்னை), டிராவிஸ் ஹெட் (533, ஐதராபாத்), ரியான் பராக் (531, ராஜஸ்தான்), சாய் சுதர்சன் (527, குஜராத்) அடுத்த இடங்களில் உள்ளனர்.
* விக்கெட் வேட்டைக்கான ஊதா தொப்பியை பஞ்சாப் கிங்சின் ஹர்ஷல் படேல் (24 விக்கெட்) வைத்துள்ளார். பும்ரா (20, மும்பை), அர்ஷ்தீப் சிங் (19, பஞ்சாப்), வருண் சக்ரவர்த்தி (18, கொல்கத்தா), முகேஷ் குமார் (17, டெல்லி) டாப் 5ல் உள்ளனர். 6வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் வேகம் நடராஜன் (17) பட்டியலில் முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
* கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் இம்முறை லீக் சுற்றுடன் மூட்டை கட்டியுள்ளன.
* இந்த முறை பிளே ஆப்புக்கு முன்னேறியுள்ள 4 அணிகளிலும் தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கொல்கத்தா: வருண் சக்கரவர்த்தி, ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர். ஐதராபாத்: நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஜெகத்வேத் சுப்ரமணியன், இலங்கை தமிழர் விஜயகாந்த் வியாஸ்காந்த். ராஜஸ்தான்: ஆர்.அஷ்வின். பெங்களூரு: தினேஷ் கார்த்திக். எனவே இம்முறை ஐபிஎல் கோப்பையை ஒரு தமிழ்நாட்டு வீரர் ஏந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

The post நேரடியாக பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் சன்ரைசர்ஸ் – நைட் ரைடர்ஸ் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: